×

ஊட்டி மசினகுடி மாயார், சிங்காரா சாலைகளில் வெளியூர் சுற்றுலா வாகனங்களுக்கு இன்று முதல் அனுமதி இல்லை: உள்ளூர் வாகனங்கள் மட்டும் செல்லலாம்

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கல்லட்டி வழியாக மசினகுடி மற்றும் தெப்பக்காடு பகுதிகளுக்கு செல்ல மலைப்பாதை உள்ளது. அபாயகரமான சரிவுகள் மற்றும் 36 குறுகிய வளைவுகளை கொண்ட கல்லட்டி மலைப்பாதையில் விபத்துகளை குறைக்கும் வண்ணம் ஊட்டியில் இருந்து கீழ் நோக்கி மசினகுடி செல்ல வெளியூர் வாகனங்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

அதே சமயம் உள்ளூர் வாகனங்கள் இரு மார்க்கமாகவும் ெசல்ல அனுமதிக்கப்பட்டனர். சுற்றுலா பயணிகள் மசினகுடியில் இருந்து ஊட்டி நோக்கி வர மட்டும் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் இந்த சாலையில் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு முழுமையாக தடைவிதிக்கவும், மசினகுடி மற்றும் கிராமப்புற இணைப்பு சாலைகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கவும் உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

மேலும் அங்கீகரிக்கப்பட்ட சவாரி வாகனங்கள் மற்றும் உள்ளூர் வாகனங்கள் மட்டுமே மாயார், சிங்காரா பகுதிகளில் அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இதனால் மசினகுடி பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால், தமிழக அரசு தலையிட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சூழலில் வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி மசினகுடி கிராம பகுதியில் உள்ள மாயார், சிங்காரா மற்றும் விபூதிமலை சாலைகளில் இன்று முதல் அங்கீகரிக்கப்பட்ட ஜீப், சவாரி வாகனங்கள் மற்றும் உள்ளூர் கிராம மக்கள் வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறது. வெளியூர் வாகனங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் இந்த பகுதிகளுக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது என்று அறிவித்து உள்ளனர்.

Tags : Ooty ,Ooty-Masinakudi Mayar ,Singara ,Nilgiris ,Masinakudi ,Theppakadu ,Kallatti ,Mudumalai Tiger Reserve ,
× RELATED டெல்லியில் சிஜேபி அமைப்பின்...