×

மேட்டூர் அணை திறக்காததால் பாளம் பாளமாக வெடித்து வறண்டு போன வயல்கள்; கேள்விக்குறியான சம்பா சாகுபடி: டெல்டா விவசாயிகள் கவலை

நாகப்பட்டினம்: மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்காததால் பாளம், பாளமாக வெடித்து வயல்கள் வறண்டு சம்பா சாகுபடி கேள்விக்குறியானது. இதனால் டெல்டா விவசாயிகள் கவலையுடன் உள்ளனர். காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும். ஆனால் நடப்பு ஆண்டு தமிழக அரசின் அலட்சியமான போக்கால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.

இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் குறுவை சாகுபடி பொய்த்து போனது. அதிலும் காவிரி நீரை மட்டுமே நம்பியுள்ள கடைமடை பகுதிகளில் குறுவை சாகுபடி முற்றிலும் கேள்விக்குறியாகியுள்ளது. காவிரி டெல்டாவில் காவிரி நீரை மட்டும் நம்பி காத்திருந்த விவசாயிகளும், விவசாய கூலி தொழிலாளர்களும் வேலையில்லாமல், தங்களது குடும்பத்தை நடத்த முடியாமல் கடும் வேதனையில் உள்ளனர்.

அதேபோல் வழக்கமாக 5 லட்சம் ஏக்கரில் நடைபெறும் குறுவை சாகுபடி தமிழக அரசின் அலட்சியமான போக்கால் இலக்கை அடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோடை மழையும் போதுமானதாக பெய்யாமல் போனதால் நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல், கீழ்வேளூர், திருப்பூண்டி, திருக்குவளை, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் வயல்கள் பாளம், பாளமாக வெடித்து வறண்டு போய் உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையுடன் உள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையை நம்பித்தான் பணிகளை தொடங்குவோம். அதன்படி நடப்பு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வந்து விடும் என்ற நம்பிக்கையில் நிலத்தை தயார் செய்தோம். ஆனால் தண்ணீர் வரவில்லை. இருப்பினும் இயற்கை கை கொடுக்கும் என உழவு பணிகளை தொடங்கினோம். இயற்கையும் சதி செய்து விட்டது. இதனால் எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு வயல்கள் வறண்டு பாளம் பாளமாக வெடித்து போய் உள்ளது.

இதனால் சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாக போய் விடும் என அச்சத்தில் இருக்கிறோம். சில பகுதிகளில் விதைக்கப்பட்ட நெற்பயிர்கள் போதிய ஈரப்பதம் இல்லாததால் கருகி வருகிறது. குறுவை பாதிப்பு ஏற்பட்டு குடும்பத்தை நடத்த கஷ்டப்படும் நாங்கள் சம்பா சாகுபடியை தொடங்கி அதிலும் பாதிப்பு ஏற்பட்டால் எப்படி சமாளிக்க முடியும்.  மேட்டூரிலிருந்து தண்ணீர் திறக்கப்படாத ஒவ்வொரு நாளும் நிலைமை மேலும் மோசமடைந்து வருகிறது.

கர்நாடகாவில் இருந்து உரிய காவிரி நீரை தமிழகத்திற்கு பெற்று தருவதற்கான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம் காட்ட வேண்டும். எனவே தமிழக அரசு டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டமாக உடனே அறிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், விவசாயக்கூலி தொழிலாளர்களுக்கும் தேசிய பேரிடர் நிதியில் இருந்து நிவாரணம் வழங்க வேண்டும். குறுவை சிறப்பு தொகுப்பை தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் சம்பா தொகுப்பாக மாற்றி எந்தவித பாகுபாடுமின்றி வழங்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Tags : Mettur dam ,Delta ,Nagapattinam ,Cauvery Delta district… ,
× RELATED டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் மீது...