×

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடக்கம்; வீட்டிலிருந்தபடியே குடும்ப விவரங்களை இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்: மாநகராட்சி ஆணையர் தகவல்

 

சென்னை, ஜூலை 18: மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முதற்கட்டப் பணி தொடக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டிலிருந்தபடியே குடும்ப விவரங்களை பொதுமக்கள் இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என்று ஆணையர் ஜி.எஸ்.சமீரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முதல்கட்டப் பணிகள் தொடங்குகின்றன. மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது வெறும் மக்கள் எண்ணிக்கையைக் கணக்கிடும் பணி மட்டும் இன்றி, எதிர்கால வளர்ச்சிக்கான அடித்தளமாக இது அமைகிறது.

கல்வி, மருத்துவம், குடிநீர், சாலை, வீட்டு வசதி, சமூகப் பாதுகாப்பு, மக்கள் நலத் திட்டங்கள் என அரசின் அனைத்து திட்டங்களையும் சரியாக திட்டமிடுவதற்கு மக்கள்தொகை கணக்கெடுப்பின் தகவல்கள் தான் அடிப்படையாக அமைகின்றது. அதனால், ஒவ்வொரு குடும்பமும் சரியான தகவல்களை அளிப்பது மிகவும் முக்கியம். இந்தியாவில் முதல்முறையாக, இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முழுமையாக டிஜிட்டல் முறையில் நடைபெறுகிறது. இந்த கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமான வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு 2026 ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30 வரை நடைபெறும். அதற்கு முன்பாக, நேற்று முதல் ஆகஸ்ட் 31ம்தேதி வரை, முதன்முறையாக சுய கணக்கெடுப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், மக்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே தங்களது குடும்பத்தின் விவரங்களை தாங்களே இணையம் வழியாக https://se.census.gov.in என்ற சுய கணக்கெடுப்பு இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். தங்களது சுய கணக்கெடுப்பை பதிவு செய்த பின் வழங்கப்படும் சுய கணக்கெடுப்பு பதிவு எண்ணை தங்கள் இல்லத்திற்கு வரும் கணக்கெடுப்பாளரிடம் வழங்கினால் போதுமானது. எனவே, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் இந்த சுயக் கணக்கெடுப்பிலும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பிலும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மக்கள் வழங்கும் அனைத்து தகவல்களும் சட்டப்படி முழுமையான ரகசியத்துடன் பாதுகாக்கப்படும். எந்த தயக்கமும் இல்லாமல், உண்மையான மற்றும் துல்லியமான தகவல்களை வழங்கலாம். மக்களின் நலனே அரசின் முதன்மையான நோக்கம். இன்று எடுக்கும் சரியான தகவல்கள் தான் நாளைய வளர்ச்சிக்கான வலுவான அடித்தளமாக அமையும். மக்கள் நலனுக்காக, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027-ஐ வெற்றிகரமாக நடத்துவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கல்வி, மருத்துவம், குடிநீர், சாலை, வீட்டு வசதி, சமூக பாதுகாப்பு என அரசின் திட்டங்களை சரியாக திட்டமிட மக்கள்தொகை கணக்கெடுப்பின் தகவல்கள் தான் அடிப்படையாக அமைகிறது

 

Tags : Chennai ,Commissioner ,G.S. Sameeran ,Corporation Commissioner ,Sameeran ,
× RELATED வங்கியில் தீ விபத்து: ஆவணங்கள், கணினி எரிந்து நாசம்