- சோனம் வான்க்சுக்
- பிரதமர் மோடி
- சர்வதேச அமைப்பு
- புது தில்லி
- கரப்பன்புச்சி
- ஜனதா கட்சி
- தர்மந்திர பிரதான்
புதுடெல்லி: நீட் உள்ளிட்ட தேர்வுகளின் வினாத்தாள் கசிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கு லடாக்கை சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்க்சுக் ஆதரவு தெரிவித்ததுடன், போராட்டத்தில் இணைந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இவரது உண்ணாவிரதம் நேற்று 18வது நாளை எட்டியது. இதுவரை அவர் 8.5 கிலோ எடை குறைந்துள்ளார். அவர் மிகவும் சோர்வுடன் காணப்பட்டார்.
இந்நிலையில் அவருக்கு கட்டாயமாக உணவு வழங்க கோரி டெல்லி ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘இதுகுறித்து அரசு எந்தவித அக்கறையும் காட்டாமல் உணர்வற்ற நிலையில் உள்ளது. சமூக ஆர்வலருக்கு கட்டாயமாக உணவு அளிக்குமாறு உத்தரவிட வேண்டும். அவரை ஒரு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று திரவ உணவை கட்டாயமாக ஊட்டுவதே செய்ய வேண்டிய எளிய நடவடிக்கையாகும். இதே நிலைமை தொடர்ந்தால் இன்னும் 2 நாட்களில் அவர் உயிரிழக்க நேரிடலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரிக்கப்படும் என தெரிகிறது.
இந்நிலையில் வாங்சுக்கின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்துள்ள அமெரிக்காவை சேர்ந்த ‘ஹிந்துஸ் ஃபார் ஹியூமன் ரைட்ஸ்’ என்ற இந்திய புலம்பெயர் அமைப்பு ஒன்று, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளது. அதில், ‘போராட்டக்காரர்களை அரசு சந்திக்க வேண்டும்; அவர்கள் சுட்டிக்காட்டிய தேர்வு மற்றும் நிர்வாக தோல்விகளுக்கு ஆக்கபூர்வமான பதிலை அளிக்க வேண்டும்; அத்துடன் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான நம்பகமான, காலக்கெடுவுடன் கூடிய செயல்முறையை உருவாக்க வேண்டும்” என்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அதேபோன்று, ‘ஹிந்துஸ் ஃபார் ஹியூமன் ரைட்ஸ்’ அமைப்பின் நிர்வாக இயக்குனர் சுனிதா விஸ்வநாத்தும், அரசின் அலட்சியப்போக்கு ஒரு உயிரை பறித்து விட கூடாது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
