×

எ.வ.வேலு லுக்அவுட் நோட்டீஸ் விவகாரம் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் பணிகள் நடக்காமல் தனியார் நிறுவனங்களுக்கு தொகைகள் விடுவிக்கப்பட்டு, ரூ.3.23 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், கான்ட்ராக்டர்கள் ஆகியோர்களுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தநிலையில், எ.வ.வேலுவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர். இதையடுத்து இந்த நடவடிக்கைக்கு எதிராகவும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் எ.வ.வேலு தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், லுக் அவுட் நோட்டீசுக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து மருத்துவ சிகிச்சைப் பிறகு சிங்கப்பூரிலிருந்து சென்னை திரும்பிய எ.வ.வேலு லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நேற்று ஆஜராகி இருந்தார். இந்த நிலையில் மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ‘‘உயர்நீதிமன்றம், எங்களது கோரிக்கையின் மீது தேவையில்லாமல் உத்தரவை பிறப்பித்துள்ளது. விசாரணைக்கு எ.வ.வேலு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவருடைய பாஸ்போர்ட்டையும் ஒப்படைக்க வேண்டும் என்று வாதிட்டார். எ.வ.வேலு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ‘‘தமிழகத்தில் புதியதாக அமைந்துள்ள அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இப்படி செயல்படுகின்றனர்’’ என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘இந்த விவகாரம் உயர்நீதிமன்ற விசாரணை நிலுவையில் உள்ளது. அதற்குள் ஏன் உச்ச நீதிமன்றத்திற்கு வந்தீர்கள். மருத்துவ சிகிச்சை முடிந்த பின்னர் எ.வ.வேலு மீண்டும் சென்னை திரும்பிவிட்டார். அப்படியென்றால் லஞ்ச ஒழிப்புத்துறை அவரிடம் விசாரணை நடத்தலாமே. எதிர்மனுதாரரும் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக தெரிவித்துள்ளார்.

அப்படி என்றால் இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா என்ற கேள்வி தான் எங்களுக்கு எழுகிறது. பாஸ்போர்ட் ஒப்படைப்பு விவகாரத்தை பொருத்தவரையில் லஞ்ச ஒழிப்புத்துறையின் கோரிக்கையை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடக்கும் போது முறையிடுங்கள். இந்த விவகாரத்தில் நாங்கள் எந்தவித உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை என்று உத்தவிட்ட நீதிபதிகள், தமிழ்நாடு அரசின் அனைத்து கோரிக்கைகளையும் முழுமையாக நிராகரித்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Tags : E.V.Velu ,Supreme Court ,Tamil Nadu government ,New Delhi ,Tamil Nadu ,Karur ,
× RELATED மாணவர் போராட்டத்துக்கு பணிந்தது...