அட்லாண்டா: உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் 2வது அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா, இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. பிபா உலகக்போப்பை கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதன் 2வது அரையிறுதி போட்டி இன்று இந்திய நேரப்படி நள்ளிரவு 12:30 மணிக்கு அமெரிக்காவின் அட்லான்டா நகரில் நடக்கிறது. இந்த போட்டியில் அர்ஜென்டினா அணியும், இங்கிலாந்து அணியும் மோதுகின்றன. அர்ஜென்டினா அணி 1978, 1986, 2022ம் ஆண்டுகளில் சாம்பியன் ஆனது. தற்போது 7வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் ஆர்வத்தில் உள்ளது.
இதுவரை அந்த அணி அரை இறுதிப்போட்டியில் தோற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் தலைசிறந்த வீரரும், கேப்டனுமான லியோனல் மெஸ்ஸி அர்ஜென்டினா அணியின் மிக முக்கிய வீரராக இருக்கிறார். அவர், இந்த தொடரில் இதுவரை 8 கோல்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார். ஒட்டுமொத்த உலகக் கோப்பையில் 21 கோல் அடித்து சாதனையாளராக உள்ளார். இவரை தவிர லாடெரா மார்ட்டின்ஸ், என்சோ பெர்னாண்டஸ், ரோமியோ, ஜிவோனி செல்சா, ஜூலியன் அல்வாரெஸ், அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் ஆகிய வீரர்களும் அணிக்கு பக்க பலமாக உள்ளனர்.
1966ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து 4வது முறையாக அரையிறுதி போட்டியில் விளையாடுகிறது. 60 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்குள் நுழையும் ஆர்வத்தில் உள்ளது. 1966ம் ஆண்டு அந்த அணி உலகக்கோப்பை வென்ற பிறகு இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெறவில்லை. 1990, 2018ம் ஆண்டுகளில் அரை இறுதிப்போட்டியில் தோற்றது. தற்போது, அர்ஜென்டினாவுக்கு எதிராக விளையாடும் இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஹாரி கேன், ஜூடே பெல்லிங்காம் ஆகியோர் முக்கிய வீரர்களாக உள்ளனர். இருவரும் இந்த தொடரில் 6 கோல்கள் அடித்து 3வது இடத்தில் உள்ளனர்.
இவர்கள் தவிர ஷக்கா, ஜாரெல் குவான்சா, அந்தோனி கார்டன், எல்லியாட் ஆண்டர்சன், ரைஸ் ஜேம்ஸ் போன்ற வீரர்களும் இங்கிலாந்து அணிக்கு பக்க பலமாக உள்ளனர். தர வரிசையில் 2வது இடத்தில் உள்ள அர்ஜென்டினா அணியும், 4வது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணியும் அரையிறுதியில் மோதுகின்றன. இந்த தொடரில் 2 அணிகளுமே இதுவரை நடந்த ஆட்டங்களில் தோல்வியை தழுவியதில்லை. எனவே, இறுதி போட்டிக்குள் நுழைய 2 அணிகளும் தீவிரமாக களமாடும். இதனால், இந்த போட்டி கால்பந்து ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.
24 ஆண்டுகளுக்கு பிறகு மோதல்
அர்ஜென்டினா அணியும், இங்கிலாந்து அணியும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 24 ஆண்டுகளுக்கு பிறகு மோதுகின்றன. கடைசியாக, 2002ம் ஆண்டு நடந்த லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. உலகக்கோப்பை போட்டியில் இரு அணிகளும் 5 முறை மோதியுள்ளன. இதில், இங்கிலாந்து 3 போட்டியிலும், 2 போட்டியில் அர்ஜென்டினாவும் வெற்றி பெற்றன. 1998ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டி 2வது சுற்றில் மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. பின்னர் நடந்த பெனால்டி ஷூட் அவுட்டில் அர்ஜென்டினா 4-3 என்ற கோல் கணக்கில் வென்றது.
1986ம் ஆண்டு கால் இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது. 1966ம் ஆண்டு கால் இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கிலும், 1962ம் ஆண்டு லீக் ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது. சர்வதேச போட்டி மற்றும் நட்பு ஆட்டம் என இரு அணிகளும் 14 முறை மோதியுள்ளன. இதில், இங்கிலாந்து 6 போட்டியிலும், அர்ஜென்டினா 3 போட்டியிலும் வெற்றி பெற்றன. 5 போட்டி டிரா ஆனது.
இங்கி. எதிராக முதல்முறையாக மெஸ்ஸி
உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரான மெஸ்ஸி இதுவரை இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியதில்லை. பிரேசில், பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற அனைத்து முன்னணி நாட்டு அணிகளுடன் அவர் விளையாடி இருந்தார். முதல் முறையாக இங்கிலாந்துக்கு எதிராக இன்று அவர் களம் இறங்குகிறார். 39 வயதான மெஸ்ஸி 25 சர்வதேச போட்டிகளில் விளையாடி 125 கோல்கள் அடித்துள்ளார்.
ரைஸ் களம் இறங்குகிறார்?
உலகக்கோப்பை குரூப் சுற்றில் கானாவுக்கு எதிரான போட்டியின்போது இங்கிலாந்து வீரர் ரைஸ் ஜேம்ஸுக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக பனாமா, காங்கோ மற்றும் மெக்ஸிகோ அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அவர் விளையாடவில்லை. நார்வேக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் 2வது பாதியில் மாற்று வீரராக களமிறங்கினார். மெக்சிகோவுக்கு எதிரான போட்டியில் சிவப்பு அட்டை பெற்ற ஜாரெல் குவான்சா இன்னும் இடைநீக்கத்தில் இருப்பதால் இன்று அர்ஜென்டினாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ரைஸ் ஜேம்ஸ் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
