செங்கல்பட்டு, ஜூலை 15: கூடுவாஞ்சேரி அடுத்து உள்ள தைலாவரம் பகுதியில் ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக பாதிக்கப்பட்ட மூதாட்டி தங்கள் நிலத்தை மீட்டு தரும்படி கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். கூடுவாஞ்சேரி அடுத்துள்ள தைலாவரம் பகுதியைச் சேர்ந்தவர் வனஜா (77). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். வனஜா கடந்த 1996ம் ஆண்டு அதே பகுதியில் 10 சென்ட் காலி வீட்டுமனையை வாங்கி பத்திரப்பதிவு செய்தார். இதன் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.3 கோடி எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பிரதீப், மதுரை ஆகியோர் இணைந்து அந்த 10 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகப் பாதிக்கப்பட்டவர் தரப்பு குற்றம் சாட்டுகிறது.
இதுகுறித்து நிலத்தின் உரிமையாளர்கள் தட்டிக் கேட்டபோது ஆக்கிரமிப்பாளர்கள் அவர்களை ஆபாசமாகத் திட்டி தரக்குறைவாகப் பேசி தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக கடந்த ஆண்டே கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் வனஜா தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் எதிர்தரப்பினர் செல்வாக்குடன் இருப்பதால் காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், குறைந்தபட்சம் முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
காவல்துறையில் நீதி கிடைக்காததால் தங்களது இடத்தை அளந்து எல்லை கற்கள் நட்டு ஆக்கிரமிப்பை மீட்டுத் தருமாறு செங்கல்பட்டு மக்கள் குறைதீர் முகாமில் கலெக்டர் வீரப்பனிடம் வனஜா மற்றும் அவரது மகன்கள் நேற்று முன்தினம் மனு அளித்தனர். இதுகுறித்து வனஜாவின் மகன்கள் கூறுகையில், நாங்கள் அதிகாரிகளிடம் நிலத்தை அளந்து தரக்கோரி மனு அளித்தால் மனுவில் உள்ள எங்கள் செல்போன் எண்ணை எடுத்துக்கொண்டு இடத்தை விற்பனை செய்கிறீர்களா? எவ்வளவு விலை கொடுத்தால் தருவீர்கள்? என எங்களிடமே நில புரோக்கர்கள் மற்றும் ஒரு சில நபர்கள் பேரம் பேசுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
