×

இறந்த பின் உங்கள் உடல் யாருக்கு சொந்தம்!

நன்றி குங்குமம் தோழி

உங்களின் சொந்த உடல் உங்க ளுக்கே சொந்தமின்றி போகும் அந்த நொடி… ஒன்பது பேருக்கு மறுவாழ்வு கொடுக்கும் பொக்கிஷமாய் எப்படி மாறுகிறது? இறந்த பின் மருத்துவ மாணவர்களின் கல்விக்கு கொடையாக வழங்கப்படும் உடல் தானம் குறித்தெல்லாம்… முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களால் தொடங்கப்பட்டு, 2008 முதல் 2016 வரை உறுப்புதான திட்டத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்த மருத்துவர் அமலோற்பவநாதனிடம் சில கேள்விகளை முன்வைத்ததில்…

உறுப்பு தானம் குறித்து..?

இந்தியாவில், தமிழகம்தான் உறுப்புதானத்தில் முதல் மாநிலமாகவும், முன்னோடி மாநிலமாகவும் திகழ்கிறது. தமிழ்நாடு வகுத்த விதிமுறைகளையே, இன்று பல்வேறு மாநிலங்களும் இந்தியாவில் பின்பற்றி வருகிறது. அந்தவகையில், உறுப்பு தானத்தை இரண்டு வகையாகப் பிரித்துப் பார்க்கலாம். முதலாவது உயிரோடு இருப்பவர்கள், உயிரோடு இருக்கின்ற நோயாளிக்கு, தனது உடல் உறுப்பை தானமாக கொடுப்பது. உதாரணத்திற்கு நம்மிடம் இருக்கும் இரண்டு சிறுநீரகத்தில் ஒன்றை தானம் செய்வது. அதேபோல் கல்லீரல், கணையம், சிறுகுடல், நுரையீரல் போன்றவற்றின் ஒரு பகுதியையும் தானம் செய்யலாம்.

இதிலும் இரண்டு வகை இருக்கிறது. முதலாவது தன் அம்மா, அப்பா, மனைவி, பிள்ளைகள், உடன் பிறந்தவர்கள் என நெருங்கிய உறவினர்களுக்கு தானம் செய்வது. இதெற்கென சில நடைமுறைகள் உள்ளது. இரண்டாவது என் நண்பர்கள், உடன் பணியாற்றுபவர்கள், தூரத்து உறவினர், என் ஆசிரியர், நான் நேசிக்கின்ற தலைவர் என நானே விருப்பப்பட்டு, தானாக முன்வந்து தானம் செய்வது. இதில், இரண்டு விஷயங்களை நாம் நிரூபிக்க வேண்டும். அதாவது, மாநில அரசு நியமித்துள்ள மருத்துவ துறை சார்ந்த கமிட்டி ஒன்று இதற்கென இருக்கின்றது. தானம் தருபவரும், பெறுபவரும் அவர்களின் முன் சென்று,

* இவரை ஏற்கனவே எனக்குத் தெரியும். இவர் என் நட்பில் இருப்பவர். அல்லது உடன் பணியாற்றுபவர் என்றும்…

* நான் எனது உடல் உறுப்புகளை பணத்திற்காக கொடுக்கவில்லை. அவரின் மீது வைத்துள்ள உள்ளார்ந்த அன்பில், அவர் மீதிருக்கும் மதிப்பால் தருகிறேன் என்பதை நிரூபிக்க வேண்டும்.

இந்த மருத்துவக் கமிட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மருத்துவக் கல்லூரிகளிலும் இயங்குகின்றது.

மூளைச்சாவு அடைந்த நபரின் உறுப்புகளை தானம் பெறுவது குறித்து..?

இது இரண்டாவது வகை. விபத்தில் அடிபட்டு, மூளைச்சாவு அடைந்தவரின் மூளை நிரந்தரமாய் பழுதாகிவிட்ட நிலையில், அவர்களுடைய மற்ற உறுப்புகள் இயங்கிக் கொண்டிருக்கும். அரசு மருத்துவர்கள் அதற்கான சான்றிதழ்களை வழங்கிவிட்ட நிலையில், இரண்டு அல்லது அதிகபட்சம் மூன்று நாட்களில் அவரின் இயக்கம் நின்றுவிடும் என்கிற பட்சத்தில், குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் இயங்கிக் கொண்டிருக்கும் மற்ற உறுப்புகளை, தானம் செய்வது குறித்த விழிப்புணர்வை குடும்பத்தினரிடம் ஏற்படுத்த வேண்டும்.

குடும்பத்தினர் சம்மதித்தால், எழுத்து மூலம் அவர்களிடம் உறுதி வாங்கிய பிறகு, தமிழக அரசு நிறுவனமான உறுப்புமாற்று ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்படும். அங்குள்ள பதிவேட்டில் இருக்கும் நோயாளிகளின் முன்னுரிமை அடிப்படையில், தானம் வழங்குபவரின் வயதைப் பொறுத்து, யார் யாருக்கு என்னென்ன உறுப்புகள் தேவைப்படுகிறதோ, அந்த வயது ஒத்தவர்களுக்கே மாற்று உறுப்பு பொறுத்தப்படும். வயதானவரின் சிறுநீரகத்தையோ, நுரையீரலையோ இளம் வயது நபர்களுக்கு பொறுத்த மாட்டார்கள்.

நம்மையும் மீறி ஒரு மூளைச்சாவு நேரும் பட்சத்தில், மருத்துவர்கள் உறுப்பு தானத்திற்காக குடும்பத்தாரை அணுகும்போது, தயங்காமல் ஒத்துக்கொள்ளுங்கள். நீங்கள் சொல்கிற YES என்கிற ஒற்றை வார்த்தை, 9 உயிர்களைக் காப்பாற்றும். இப்படியாகத்தான் தமிழகத்தில் உறுப்புத்தானம் செய்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு மேல் தாண்டியிருக்கிறது.

எந்தெந்த உறுப்புகளை தானமாகப் பெற முடியும்..?

இதயம், இரண்டு நுரையீரல், கல்லீரல், கணையம், சிறுகுடல், இரண்டு சிறுநீரகம், தோல், மூட்டுகள்(Joints), கண்கள் என கிட்டதட்ட 8 முதல் 9 உறுப்புகளை தானமாகப் பெற முடியும். இதன் வழியாக 9 உயிர்களை நம்மால் வாழ வைக்க முடியும். இதில் என்னென்ன உறுப்புகள் உடலில் இருந்து எடுக்கப்படுகிறது என்பதையும் சம்பந்தப்பட்டவர்களிடம் எழுத்து மூலமாய் தெரிவிக்கப்படும். எதை எல்லாம் தானமாக அவர்கள் தர விரும்புகிறார்கள் என்பதும் கேட்கப்படும். சிலர் இதயத்தை எடுக்க வேண்டாம் என்பார்கள். சிலர் கண்களைத் தொட வேண்டாம் என்பார்கள். அவர்கள் சம்மதிக்கும் உறுப்புகள் மட்டுமே தானமாக எடுக்கப்படும்.

இதயத்தை பொருத்திக் கொண்ட நபரின் செயல்கள், விருப்பங்கள் இறந்தவரை போல் இருப்பதாய் சொல்லப்படுவது உண்மையா?

இது முற்றிலும் கற்பனையே. இதற்கென பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று இல்லையென நிரூபிக்கப்பட்டுள்ளது. நம் வீட்டில் தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்த பம்ப் ரிப்பேரானால் புது பம்பை வாங்கி மாட்டுகிறோம். அதற்காக அது பழைய பம்பை போலவே வேலை செய்கிறது எனச் சொல்ல முடியுமா? அதுபோலத்தான் இதுவும். இதயம் என்பது ஒரு பம்ப் மட்டுமே. நம் சிந்திக்கும் திறன் மூளையில் மட்டுமே இருக்கிறது. மேலும், இதில் தானம் செய்பவர்களையும், தானம் பெறுபவர்களையும் மருத்துவர்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் அடையாளப்படுத்துவதில்லை. காரணம், தானம் செய்தவர்களின் உணர்ச்சி மிகு போராட்டங்கள் இதில் இருக்கிறது. இதனால் எமோசனல் பாண்டிங் போன்றவை உருவாகிவிடுகிறது.

இறந்த பிறகு செய்யப்படும் உடல் தானம் குறித்து..?

இதிலும் இரண்டு விதம் இருக்கிறது. முதலாவது, குறிப்பிட்ட நபர் இறந்த 6 மணி நேரத்திற்குள், கண்கள் இரண்டில் இருந்து கார்னியா, முதுகுப் பகுதியில் இருந்து தோல், மூட்டுகள்(Joints) போன்றவற்றை இறந்தவர் உடலில் இருந்து எடுத்ததற்கான அறிகுறிகள் தெரியாத அளவுக்கு தானமாகப் பெற முடியும். வீட்டில் வைத்தே இதைச் செய்ய முடியும். இறந்தவர் உடலில் இருந்து எடுக்கப்படும் இந்த மூன்றும், உயிரோடு இருக்கிற நபர்களுக்கு பொருத்தப்படும். தோல் மட்டும் தோல் வங்கியில் பாதுகாக்கப்பட்டு,
தீ காயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருத்தப்படுகிறது.

உடல் தானத்தில் இரண்டாவது, மருத்துவ ஆராய்ச்சிக்காக “இங்கு அமரர்கள் மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தருகிறார்கள்” என எழுதப்பட்டிருக்கும். மருத்துவ மாணவர்களின் உடற்கூறியல் (Anatomy) வகுப்புகளுக்கு பாடமாக இந்த உடல்கள் பயன்படுத்தப்படுகிறது.

உடல் தானத்திற்கான நடைமுறைகள், சட்ட விதிமுறைகள் குறித்து?

வீட்டுக்கு அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனையை அணுகி, அங்கிருந்து பெறப்படும் விண்ணப்பத்தில் உள்ள தகவல்களை பூர்த்தி செய்வதுடன், அவற்றுடன் இரண்டு சாட்சிக் கையெழுத்துகளைப் பெற்று அரசு மருத்துவமனையில் ஒப்படைக்க வேண்டும். சாட்சிகள் குடும்ப உறுப்பினர்களாய் இருக்க வேண்டும் என்பதில்லை. நண்பர்கள், நம்மை நன்கு அறிந்தவர்கள் என யாராவது இருவர் கையெழுத்திட்டால் போதுமானது.

மருத்துவ சட்டங்கள் எவ்வளவு வலிமையானதாக இருந்தாலும் சரி, விழிப்புணர்வு எவ்வளவு இருந்தாலும் சரி, இறுதி நிமிஷத்தில், துக்க வீட்டில் இருக்கும் குடும்பம் ‘சரி’யெனச் சொல்கிற அந்த ஒற்றை வார்த்தைதான் மனித நேயத்தின் உச்சம்.குடும்ப உறுப்பினர்கள் அவர்களின் விருப்பத்தை அரசு மருத்துவமனைக்கு தெரிவித்து, அவர்களது மத சடங்குகளை முடித்த பிறகு, அவர்களாகவே உடலைக் கொண்டுவந்து மருத்துவமனையில் ஒப்படைக்க வேண்டும்.

தானமாகப் பெறப்பட்ட உடலின் அடுத்தகட்ட நடைமுறைகள்?

நீண்ட நாட்களுக்கு உடல் கெடாமல் இருப்பதற்காக ஃபார்மலின் எனப்படும், உடலை பதப்படுத்துகின்ற சொல்யூஷனுக்குள் உடல் போடப்படும். அப்போது உடலில் இருக்கும் முடிகள் அத்தனையும் உதிர்ந்து, இறந்தவர் உடல் அடையாளம் காண முடியாத நிலைக்கு, கருப்பு நிறத்தில், விறைப்புத் தன்மைக்கு மாறியிருக்கும். அதன் பிறகே கேடவர் (Cadaver) என்ற பெயரில், உடற்கூறியல் (Anatomy) மாணவர்கள் படிக்க இந்த உடல்கள் அனுப்பி வைக்கப்படும்.

உரிமை கோர யாருமற்ற உடல்கள் மருத்துவக் கல்விக்கு பயன்படுகிறதா? எந்த மாதிரியான உடல்களை தானம் பெறுவதில் தடை உள்ளது?

பிணவறையில் ஆறு மாதங்கள் வரை பாதுகாக்கப்பட்ட நிலையில், உரிமைகோர யாரும் வராத நிலையில், மருத்துவ மாணவர்களின் உடற்கூறியல் படிப்புக்கு இந்த உடல்கள் அணுப்பப்படும். இதற்கென அரசு சட்டங்கள் தனியாக இருக்கின்றது. தற்கொலை, கொலை போன்ற உடல்கள் காவல்துறையின் விசாரணை வளையத்தில் இருப்பதால், உடல் தானத்திற்கு எடுக்கப்பட மாட்டாது. மற்றபடி 90 சதவிகிதம் உடல்கள் தானமாகப் பெறுவதில் எந்தத் தடையும் இருக்காது.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

 

Tags : SAFFRON ,
× RELATED ஜீரோ வேஸ்ட் வெட்டிங் பிளான் பண்ணுங்க!