நன்றி குங்குமம் தோழி
நான் முதல்வன்
கரணை கரணையான தசைக்கோள வடிவங்களோடு பலவித நிலைகளில் நின்று, இரு கைகளை கோர்த்தும் வளைந்தும் திரும்பியும் தமது உடல் பொலிவைக் காட்டும் ஆணழகர்கள் பலரையும் பார்த்திருப்பீர்கள். ஆனால், அவர்களுக்குச் சற்றும் குறைவில்லாமல் ‘பெண்ணழகி’ ஒருவர் திகழ்கிறார்-அதுவும் மணக் கோலத்தில்!அவர்தான் சித்ரா புருஷோத்தமன். பாடி பில்டரான இவரது மணப்பெண் கோலம் இணையத்தில் வைரலாகி வருகிறது. காஞ்சிபுரம் பட்டுப்புடவை அணிந்து கட்டுமஸ்தான உடலோடு தமது திருமண நாளின் போது இவர் வெளியிட்டிருக்கும் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள் பலரையும் வியப்படைய வைத்திருக்கின்றன.
யார் இந்தச் சித்ரா புருஷோத்தமன்?
அழகையும் வலிமையையும் ஒருசேர வெளிப்படுத்தும் துணிச்சல்காரி இவர். ஃபிட்னெஸ் ட்ரெயினர் பணியால் பல பெண்களுக்கும் உடல் வலிமையை அதிகரிக்க வழிகாட்டுகிறார். மிஸ்
இந்தியா ஃபிட்னெஸ், மிஸ் சவுத் இந்தியா, மிஸ் கர்நாடகா, மிஸ் பெங்களூரு, மிஸ் மைசூர் உடையார் போன்ற பல பட்டங்களை வென்றிருக்கிறார். இதில் மிஸ் கர்நாடகா பட்டத்தை
5 முறை வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.பிரபலமான பல நிறுவனங்களின் ‘பிராண்ட் அம்பாஸிடர்’ ஆகவும் மிளிர்கிறார். ‘ஃபிட்னெஸ் இந்தியா’ மற்றும் ‘பாடி பில்டிங் இந்தியா’ போன்ற பல உடற் தகுதி இதழ்களில் தோன்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இளமையில் இருந்தே உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் முனைப்புடன் சித்ரா இருந்திருக்கிறார். பளு தூக்குதல் மற்றும் பாடி பில்டிங் ஆகியவற்றில் முழு மூச்சாக இறங்குவதற்கு முன்னர், யோகா மற்றும் ஏரோபிக் வகைப் பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டார். ஆசிய பாடி பில்டிங் போட்டிகள் உட்படப் பல சர்வதேசப் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டிருக்கிறார்.சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் தமது கச்சிதமான உடல்வாகுக்காகத் தாம் மேற்கொண்ட பயண அனுபவங்களையும் பயிற்சிக் குறிப்புகளையும் உற்சாகமூட்டும் தகவல்களையும் தொடர்ந்து பகிர்கிறார்.
பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுக்கும் சித்ரா, பெண்கள் தங்களது உடலை வலிமையோடும் கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருகிறார். பாடி பில்டிங் மூலம் பெண்களுக்குத் தன்னம்பிக்கையும் சுதந்திர உணர்வும் நிச்சயம் கிடைக்கும் என்று உறுதியாகக் கூறுகிறார். தமது திருமணத்துக்காக எடுக்கப்பட்ட ஃபோட்டோ ஷூட் தருணத்தில் அடர் மஞ்சள் மற்றும் நீல வண்ணத்தில் இவர் உடுத்தியிருந்த சேலை, இவரது மிடுக்கை பளிச்சென்று காட்டியது. உடல் வலிமையை மறைக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் அவர் ரவிக்கை அணியவில்லை; ஆனாலும், இவர் புடவை அணிந்திருந்த விதம் கண்ணியத்துக்கு உரியதாகவே இருந்தது. நெற்றிச்சுட்டி, எடை மிகுந்த நெக்லஸ்கள், ஜிமிக்கி பொருத்திய காதணிகள், கை வளையல்கள், மோதிரங்கள், ஒட்டியாணம் என இவரது மணக்கோலம் அமர்க்களமாக இருந்தது.
நெற்றியில் சின்னதாக ஒரு பொட்டு, சீராகத் திருத்தப்பட்ட புருவங்கள், லைனிங் செய்யப்பட்ட கண்ணிமை முடிகள், அழகான சாயம் பூசப்பட்ட உதடுகள், தலை நிறைய பூச்சரம் எனக் காட்சியளித்த இவரைப் பெண்கள் கூட்டமும் உற்றுப் பார்த்துப் பெருமூச்சு விட்டது.சமூக ஊடகங்களில் பல இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு உடற்தகுதி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இவரது செயல்பாடுகள் இந்தத் துறையில் தாமும் சாதிக்க வெண்டும் என்ற எண்ணத்தைப் பல பெண்கள் மனதில் ஊன்றியிருக்கிறது.
3,40,00,000 நபர்கள் சித்ராவின் மண அலங்காரக் கோலத்தை இணையத்தில் பார்த்திருக்கிறார்கள். ஏராளமானோர் நேர்மறைப் பின்னூட்டங்களை இட்டு வருகின்றனர். ‘Beauty and beast’ எனச் சிலர் கொண்டாடுகிறார்கள். ‘Strength and elegance together’ என்றும் பலர் பாராட்டுகின்றனர்.‘பெண்களின் அழகு மென்மை மட்டும் அல்ல; வலிமையும் ஆகும்’ என்று சித்ரா புருஷோத்தமன் சொல்வது கூர்ந்து கவனிக்கத்தக்கது!
நகைச்சுவையாகவும் பலர் பின்னூட்டம் இட்டு வரும் நிலையில், பிரபல உடற் தகுதிப் பயிற்சியாளரான தருண் கில் என்பவர் சொல்லியிருக்கும் கருத்து புன்னகையை வரவழைக்கும்.“சித்ராவின் தோற்றம் மொத்த மாப்பிள்ளை வீட்டாருக்கும் நிச்சயம் கிலியை ஏற்படுத்தும்!”
தொகுப்பு: லதானந்த்
