- எவரெஸ்ட்
- குங்குமப்பூ பெண்
- இந்தோ-திபெத்திய எல்லை ரோந்து படை
- ஐடிபிபி
- எல்லை பாதுகாப்பு படை
- முகாமில்
- எவரெஸ்ட் மலை சிகரம்
நன்றி குங்குமம் தோழி
உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டில் வரலாறு படைக்கப்பட்டது! இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP), எல்லைப் பாதுகாப்புப் படை (BSF)யைச் சேர்ந்த 11 வீராங்கனைகள் அடங்கிய பெண்கள் இடம் பெற்ற குழு, எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் மே மாதம் 21ம் தேதி தங்களின் கால்களை பதிந்துள்ளனர். இந்தக் குழுவில் 11 பெண்கள் மலையேறும் வீராங்கனைகள், 3 பெண்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள் உட்பட, 14 பேர்கள் இருந்தனர். இந்த சாதனை, இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் நிகழ்வாகவும், பெண் வல்லமையின் அடையாளமாகவும் அவதாரம் எடுத்துள்ளது.
இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை, எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மகளிர் குழு, தரை மட்டத்திலிருந்து 8,848 மீட்டர் உயரத்தில் கம்பீரமாக நிற்கும் எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி முதலாவது மலையேற்றப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததன் மூலம், மலையேற்ற வரலாற்றில் சரித்திர மைல் கல்லை பதித்துள்ளனர். இந்த மலையேற்றப் பயணம், ஏப்ரல் 19 அன்று டெல்லி தலைமையகத்திலிருந்து கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டது.
ITBP, BSFயின் முதலாவது ‘முழுவதும் பெண்களைக் கொண்ட மலை ஏறும் குழு’, 2026 மே 21 அன்று ‘சவுத் கோல்’ (South Col) வழித்தடம் வழியாக எவரெஸ்ட் சிகரத்தை (8,848 மீ) வெற்றிகரமாக அடைந்தது. காலை 6:52 மணிக்கு முதல் சிகரத்தை அடைந்ததைத் தொடர்ந்து, 11 மலையேற்ற வீராங்கனைகள் அனைவரும் உச்சியை அடைந்தனர். அளப்பரிய துணிச்சல், உறுதிப்பாடு மற்றும் கூட்டு ஒத்துழைப்பிற்கு எடுத்துக்காட்டாக இந்த மலை ஏற்றம் மாறியுள்ளது.
இமய மலையில், 8,000 மீட்டருக்கு மேல் அமைந்துள்ள ‘மரண மண்டலம்’(Death Zone) எனப்படும் பகுதியில் நிலவும் சவால் விடும் கடுமையான வானிலை, குறைந்த ஆக்சிஜன் அளவு, சவாலான பனிச்சுவர் பகுதிகள் ஆகியவற்றை எதிர்கொள்வதில் இக்குழு தீவிரமாக ஈடுபட்டது. இந்த மலையேற்றப் பயணம், பெண்கள் வல்லமை, சாகச தலைமைத்துவம் மற்றும் உயரமான மலைப்பகுதிகளில் ஏறி சாதனை செய்தல் ஆகியவற்றில் பெண்கள் அணி செய்திருக்கும் துணிச்சலான அர்ப்பணிப்பைப் பிரதிபலித்தது.
‘தூய இமயமலையையும் அதன் பனிப் பாறைகளை காப்போம்’ (Clean Himalaya – Save Glacier) எனும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, இக்குழு எவரெஸ்ட் பகுதியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், அந்தப் பகுதியில் சிதறிக் கிடக்கும் மக்கிப் போகாத கழிவுகளையும் சேகரித்தது. இந்தச் சாதனை மலை ஏற்றத்தின் மூலம், எவரெஸ்ட் சிகரத்தை ஐந்து முறை வெற்றிகரமாக அடைந்ததை உள்ளடக்கிய 232 மலையேற்றப் பயணங்களை இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை நிறைவு செய்துள்ளது. உலகின் 8,000 மீட்டருக்கும் அதிகமான உயரம் கொண்ட பதினான்கு சிகரங்களில் ஆறு சிகரங்களை (எவரெஸ்ட், கஞ்சன்ஜங்கா, மகாளு, லோட்சே, தௌலகிரி மற்றும் மனஸ்லு) இப்படையின் வீராங்கனைகள் வெற்றிகரமாக அடைந்துள்ளனர்.
இம்முறை, வித்தியாசமாக, எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) தனது வைர விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, தனது படையைச் சேர்ந்த 4 பெண் வீராங்கனைகளை இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை பெண் வீராங்கனைகளுடன் அனுப்பி வைத்தது.இணையற்ற துணிச்சலுடனும் உறுதியுடனும் உலகின் மிக உயர்ந்த சிகரத்தை ஏறிக்கடந்த பெண்கள் குழுவில், எல்லைப் பாதுகாப்புப் படையின் லடாக்கைச் சேர்ந்த காவலர் கௌசர் ஃபாத்திமா, மேற்குவங்கத்தைச் சேர்ந்த காவலர் மூன்மூன் கோஷ், உத்தரகாண்டைச் சேர்ந்த காவலர் ரபேகா சிங், கார்கிலைச் சேர்ந்த காவலர் செரிங் சோரோல் ஆகியோர் அடங்குவார்கள். இந்த மலை ஏற்றக் குழுவின் தலைமைப் பொறுப்பை பானிதா திமுங்பி ஏற்றிருந்தார்.
“எல்லைப் பாதுகாப்புப் படையின் வைர விழா ஆண்டைக் கொண்டாடும் வகையில், இந்தப் பெண் எல்லைப் பாதுகாவலர்கள், ‘வந்தே மாதரம்’ பாடலை இச்சிகரத்தின் உச்சியில் ஏறி நின்று பாடியுள்ளார்கள். இமய மலையில் மலை ஏறும் பெரும்பாலானவர்களுக்கு சுவாசிக்க ஆக்சிஜன் உதவி தேவைப்படும் சூழ்நிலையில், ஏன் நிமிர்ந்து நிற்பதே ஒரு சவாலாக அமையும் அத்தகைய உயரத்தில், வீராங்கனைகள் உறுதியான குரலில் ‘வந்தே மாதரம்’ பாடலை ஒன்றாக இணைந்து பாடினர்’’ என்றார் பானிதா திமுங்பி.
தொகுப்பு: கண்ணம்மா பாரதி
