×

விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதியில் மார்தா: தலை தப்பினார் ஜோகோவிச்

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, உக்ரைன் வீராங்கனை மார்தா கோஸ்டியுக் தகுதி பெற்றார். காலிறுதியில் இத்தாலியின் ஜாஸ்மின் பவோலினியுடன் நேற்று மோதிய மார்தா 6-3, 6-2 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார். இப்போட்டி 1 மணி, 9 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு காலிறுதியில் செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா 6-3, 7-5 என்ற நேர் செட்களில் பெல்ஜியம் நட்சத்திரம் எலிஸ் மெர்டென்சை வீழ்த்தினார்.

விறுவிறுப்பான இப்போட்டி, 1 மணி, 50 நிமிடத்துக்கு நீடித்தது. முன்னதாக, மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று முன்தினம் நடந்த காலிறுதி ஆட்டங்களில் அமெரிக்காவின் கோகோ காப் 4-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் சக வீராங்கனை ஜெஸ்ஸிகா பெகுலாவையும், செக் குடியரசின் கரோலினா முச்சோவா 7-6 (7-4), 6-4 என்ற நேர் செட்களில் நவோமி ஒசாகாவையும் (ஜப்பான்) வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினர். அரையிறுதியில் முச்சோவா கோகோ காப், கோஸ்டியுக் நோஸ்கோவா மோத உள்ளனர்.

மாரத்தான் போராட்டம்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியஸ்ஸிமி (3வது ரேங்க்) உடன் மோதிய செர்பிய நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச் 7-6 (12-10), 3-6, 6-3, 6-7 (4-7), 7-6 (10-4) என 5 செட்களில் போராடி வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். மாரத்தான் போராட்டமாக அமைந்த அந்த போட்டி 5 மணி, 15 நிமிடங்களுக்கு நீடித்து டென்னிஸ் ரசிகர்களுக்கு திகட்டாத அறுசுவை விருந்தாக அமைந்தது.

* விம்பிள்டன் வரலாற்றில் மிக நீண்ட நேரத்துக்கு நடந்த ஆண்கள் ஒற்றையர் காலிறுதி ஆட்டம் இது தான்.

* 39 வயது ஜோகோவிச் 55வது முறையாக கிராண்ட் ஸ்லாம் தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளார்.

* கடந்த 50 ஆண்டுகளில் அரையிறுதிக்கு முன்னேறிய மிக மூத்த வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.

* ஏற்கனவே 24 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்று மார்கரெட் கோர்ட் உடன் சாதனையை பகிர்ந்துகொண்டுள்ள ஜோகோவிச், 25வது பட்டம் வென்று ஈடு இணையற்ற சாதனை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

* அரையிறுதியில் நம்பர் 1 வீரரும் நடப்பு சாம்பியனுமான யானிக் சின்னரின் சவாலை சந்திக்கிறார் ஜோகோவிச். கடந்த ஆண்டு அரையிறுதியிலும் இவர்கள் மோதியது குறிப்பிடத்தக்கது.

Tags : Martha ,Wimbledon tennis ,Djokovic ,London ,Marta Kostyuk ,Italy ,Jasmin Pavolini ,
× RELATED அர்ஜென்டினாவிடம் எகிப்து வீழ்ச்சி:...