*துவரங்குறிச்சி அருகே போக்குவரத்து பாதிப்பு
துவரங்குறிச்சி : துவரங்குறிச்சி அருகே பழுதாகி நின்ற மினிலாரி மீது மற்றொரு லோடு வாகனம் மோதிய விபத்தில் கண்ணாடி ஏற்றி வந்த மினிலாரி தலைக்குப்புற கவிழ்ந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.மதுரை மாவட்டம் அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் டிரைவர் பாலமுருகன் (29). இவர் ஒரி மினிலாரியில் அவனியாபுரத்தில் இருந்து அழங்கார கண்ணாடிகளை ஏற்றிக்கொண்டு மணப்பாறைக்கு, மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
துவரங்குறிச்சி அருகே பழையபாளையம் மேம்பாலம் அருகே நேற்று மாலை 3 மணியளவில் சென்றபோது, வாகனத்தின் பின்பக்க டயர் பழுதானதால் பாலமுருகன் வண்டியை நிறுத்திவிட்டு டயரை மாற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது, மதுரையைச் சேர்ந்த ராஜா (52) என்பவர் திருநெல்வேலியில் இருந்து தஞ்சாவூருக்கு ஒரு மினிலாரியில் தண்ணீர் பாட்டில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த தண்ணீர் லோடு வாகனம் சாலையோரம் கண்ணாடி லோடுடன் நின்று கொண்டிருந்த மினிலாரியில் பயங்கரமாக மோதியதில் மினிலாரி தலைக்குப்புற கவிழ்ந்தது.
அதன் அருகில் நின்று கொண்டிருந்த ஓட்டுநர் பாலமுருகன் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.வாகனத்தில் இருந்த கண்ணாடிகள் அனைத்தும் சுக்கு நூறாகி நெடுஞ்சாலை முழுவதும் சிதறிக்கிடந்தது.
இதனால் மதுரையில் இருந்து திருச்சி செல்லக்கூடிய வாகனங்கள் மாற்று பாதையில் அனுப்பப்பட்டது. இந்த விபத்தால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
