நாகப்பட்டினம், ஜூலை 8: கர்நாடகா மாநிலத்தில் இருந்து கடத்தி வந்து நாகப்பட்டினத்தில் விற்பனை செய்ய வைத்திருந்த 39 கிலோ புகையிலை பொருட்களை காருடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடைகள் மூலம் விற்பனை செய்வதாக வேளாங்கண்ணி டிஎஸ்பி நிக்சனுக்கு தகவல் வந்தது. இதையடுத்து எஸ்பி உத்தரவின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அவர்கள் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து கடத்தி வந்து நாகப்பட்டினத்தில் பதுக்கி வைத்து அதன் பின்னர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்களை கொடுத்து விற்பனை செய்வதாக கூறினர். அதன்படி விற்பனைக்காக 39 கிலோ புகையிலை பொருட்களை எடுத்து வந்தது தெரியவந்தது. அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்களை காரில் கடத்தி வந்த வேளாங்கண்ணி பூக்கார தெருவை சேர்ந்த நிசாருதீன்(26), சிக்கல் பனைமேடு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தமிழரசன் (31), வேளாங்கண்ணி பண்டகசாலை தெருவை சேர்ந்த சந்தோஷ்குமார்(37) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்களை காருடன் வேளாங்கண்ணி காவல் நிலையம் கொண்டு சென்றனர். இதில் தொடர்புயை மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
