×

குறைந்தது மைலேஜ்… வண்டியும் டேமேஜ்… வாகனங்களுக்கு எமனாக மாறிய இ20: சர்வே சொல்லும் சோகம்

தற்சார்பு இந்தியா’ என்ற ஒற்றை கோஷத்தை முன்னிறுத்தி, பல்வேறு கொள்கை முடிவுகளையும், திட்டங்களையும் அமல்படுத்தி வருகிறது ஒன்றிய பாஜ அரசு. ஆனாலும், சில தேவைகளுக்கு உள்நாட்டு சார்பு சாத்தியமற்றுப் போய்விடுகிறது. கச்சா எண்ணெய் தேவையும் அப்படித்தான். வாகன எரிபொருளான பெட்ரோல், டீசலுக்கு மாற்றுக்கு ஒரே தீர்வு மின்சார வாகனங்கள் தான் என்ற முடிவுக்கு பல நாடுகளும் வந்தபோதும், அதனை செயல்படுத்த முடியவில்லை. இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு இது சாத்தியமில்லாது போய்விட்டது.

எலெக்ட்ரிக் வாகனத்தின் விலை அதிகம், சார்ஜ் செய்வதற்கு போதுமான மையங்கள் மற்றும் பேட்டரி மாற்றிக் கொள்வதற்கான உள்கட்டமைப்பு வசதி முழுமை அடையாதது என காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவதற்கு மானியம் வழங்க அரசு முன்வந்தும், பலரும் வாங்காததற்கு இந்த உள்கட்டமைப்பு பற்றாக்குறை ஒரு முக்கியக் காரணம். அதுமட்டுமின்றி, சார்ஜ் செய்யும்போது தீப்பிடித்து எரிந்த ஒருசில சம்பவங்களால் வாகன பாதுகாப்பு குறித்த ஐயப்பாடுகளும் பலருக்கு நீங்கியபாடில்லை.

அதுவரை, பெட்ரோல், டீசல் வாகனங்கள் தான் பலருக்கு நிம்மதியான தேர்வாக இருக்கிறது. எரிபொருள் தேவைக்கு ஏறக்குறைய 89 சதவீதம் கச்சா எண்ணெய் இறக்குதியை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இதனை குறைக்க கண்டுபிடிக்கப்பட்ட வழிதான், எத்தனால். 2030க்குள் பெட்ரோலில் எத்தனால் கலப்பு 20 சதவீதமாக இருக்க நிர்ணயிக்கப்பட்ட இலக்கு, இந்தியாவில் 5 ஆண்டு முன்பே எட்டப்பட்டு விட்டது. 2023ம் ஆண்டு முதன் முதலாக எத்தனால் கலப்பு பெட்ரோல் அறிமுகம் செய்யப்பட்டது.

படிப்படியாக நாடு முழுவதும் விரிவாக்கப்பட்டு, தற்போது அனைத்து பங்க்குகளிலும் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் தான் விற்கப்படுகிறது. முன்னதாக, எத்தனால் கலந்த பெட்ரோலில் இயங்குவதற்கு ஏற்ப, ஒன்றிய அரசின் அறிவுறுத்தலை தொடர்ந்து இன்ஜினில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இ20க்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்ட வாகனங்களை வாங்கியவர்கள் தவிர, மற்ற அனைத்து வாகனங்களும்பழைய வாகனங்கள் தான்.

இந்த வாகனங்களில் எத்தனால் பெட்ரோல் பயன்படுத்துவது பாதிப்பை ஏற்படுத்தாது என ஒன்றிய அரசுத் தரப்பில் கூறப்பட்டாலும், அடிக்கடி பழுது, மைலேஜ் குறைவு என தொடர் பிரச்னைகளை வாகன ஓட்டிகள் சந்தித்து வந்தனர். சமீபத்திய சர்வே ஒன்று இதனை மெய்ப்பித்திருக்கிறது. 2023ம் ஆண்டு டிசம்பரில் வெளியான ஒரு புள்ளிவிவரத்தின்படி, இ20க்கு முந்தைய பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் சுமார் 38.5 கோடி. இவற்றில் பெட்ரோலில் இயங்குபவை 23.4 கோடி.

அரசு மற்றும் தொழில் துறை தரவுகளின் அடிப்படையில், கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட புதிய பெட்ரோல் வாகனங்களில் சுமார் 20 சதவீதம் மட்டுமே இ20 (20 சதவீத எத்தனால் கலந்த) பெட்ரோலைப் பயன்படுத்தும் திறன் கொண்டவை என்று ‘தாம்சன் ராய்ட்டர்சின் பிரிவு தெரிவித்திருந்தது. இவற்றில் 44,000க்கும் மேற்பட்ட பெட்ரோல் வாகன உரிமையாளர்களிடம் தனியார் அமைப்பு ஒன்று சர்வே எடுத்தது. நாடு முழுவதும் 305 மாவட்டங்களில் இது மேற்கொள்ளப்பட்டது.

அதில், 2022 அல்லது அதற்கு முன்பு வாங்கப்பட்ட பெட்ரோல் வாகனம் உங்களிடம் இருந்தால், 2025 தொடக்கத்திலிருந்து இன்ஜின், எரிபொருள் குழாய், பெட்ரோல் டேங்க், பம்ப், இன்ஜெக்டர் போன்ற பாகங்களில் வழக்கத்திற்கு அதிகமான தேய்மானம் அல்லது பழுதுபார்ப்பு தேவை ஏற்பட்டுள்ளதா? என கேட்கப்பட்டது. இதில் 55 சதவீதம் பேர், 2025ன் தொடக்கத்திலேயே, அதாவது, 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை தொடங்கி ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்குள்ளாகவே இன்ஜினில் பிரச்னை, பாகங்கள் அரிக்கப்பட்டு சேதம் அடைந்ததாக கூறியுள்ளனர்.

இது கடந்த ஜூன் மாதம் எடுக்கப்பட்ட சர்வே. இதற்கு முன்பு, கடந்த மே மாதம் நடத்திய சர்வேயில் இந்த எண்ணிக்கை 29 சதவீதமாக இருந்த நிலையில், அடுத்த சர்வேயிலேயே 55 சதவீதமாக உயர்ந்துள்ளது. இவர்களில் 24 சதவீதம் பேர், பழுதுபார்ப்பு அதிகமாக இருந்தது எனவும் 21 சதவீதத்தினர் சாதாரண பழுதுகள் இருந்ததாகவும் விவரித்தனர். 38 சதவீதத்தினர் மட்டுமே வழக்கத்திற்கு மாறான எதையும் கவனிக்கவில்லை என்று கூறினர்.

2023க்கு முந்தைய பெட்ரோல் வாகனங்களை வைத்திருப்பவர்களில் 66 சதவீதம் பேர், 2025ன் தொடக்கத்திலிருந்து தங்கள் வாகனத்தின் மைலேஜ் 10 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ஒரு மாதத்திற்கு முன்பு இந்த பிரச்னையை தெரிவித்தவர்களின் எண்ணிக்கை 45 சதவீதமாக இருந்தது. இவர்களில் 23 சதவீதம் பேர் 20 சதவீதத்திற்கும் அதிகமான மைலேஜ் இழப்பைச் சந்திப்பதாகக் கூறியுள்ளனர். 23 சதவீதம் பேர், 15 முதல் 20 சதவீத அளவுக்கு மைலேஜ் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில் 20 சதவீதம் பேர் 10 முதல் 15 சதவீதம் மைலேஜ் குறைந்ததாக கூறியுள்ளனர். ஒரு மாதம் முந்தைய சர்வேயுடன் ஒப்பிடுகையில் 10 சதவீதத்திற்கும் அதிகமான மைலேஜ் இழப்பைப் புகாரளிக்கும் வாகன உரிமையாளர்களின் எண்ணிக்கை 21 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது யாராலும் புறக்கணிக்க முடியாத, கூடாத ஒரு சர்வே முடிவு என்பதை வாகன நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த பிரச்னை குறித்து தெரிவித்த ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி, மைலேஜ் சிறிதளவு குறைத்திருக்கலாம் என எளிதாக ‘கடந்து போயிருப்பது’, அரசின் கொள்கை முடிவால் பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு பேரிடியாகவே அமைந்திருக்கிறது. சர்வேயை தொடர்ந்து, இ20யால் பிரச்னை இல்லை என ஒன்றிய அரசு விளக்கங்களை வெளியிட்டிருந்தாலும், மக்களின் பிரச்னையை புறந்தள்ளுவதற்கான அல்லது மூடி மறைப்பதற்கான விஷயமாக இருந்து விடக்கூடாது எனவும், இதற்கு தீர்வு தரவேண்டியது அரசின் கடமை எனவும் வாகன நிபுணர்களும், மக்களும் வலியுறுத்துகின்றனர்.

* பாதிப்புகளும் – காரணங்களும்
எத்தனால் பெட்ரோலால், குறிப்பாக இ20க்கு ஏற்ப வடிவமைக்கப்படாத பழைய வாகனங்களில், பிரச்னை ஏற்பட வாகன நிபுணர்களால் கூறப்படும் முக்கியக் காரணங்கள்:

* ஆற்றல் குறைவு: எத்தனாலின் ஆற்றல் அடர்த்தி பெட்ரோலைவிடக் குறைவு. அதனால் அதே தூரம் செல்ல அதிக எரிபொருள் தேவைப்பட்டு மைலேஜ் குறையலாம்.

* ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை: எத்தனால் காற்றிலுள்ள ஈரப்பதத்தை ஈர்க்கும். இதனால் நீண்டகாலத்தில் பெட்ரோல் டேங்க், பம்ப், இன்ஜெக்டர் போன்ற பாகங்களில் அரிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

* ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பாகங்கள் பாதிப்பு: பழைய வாகனங்களின் ஹோஸ், சீல், கேஸ்கட், ஓ -ரிங் ஆகியவை

* இ20க்காக வடிவமைக்கப்படவில்லை என்றால், அவை விரைவாக தேய்ந்து கசிவு அல்லது பழுது ஏற்படலாம். பழைய என்ஜின் அமைப்புடன் பொருந்தாமை: இ20க்கு ஏற்ற புதிய வாகனங்களில் எரிபொருள் சிஸ்டம் அதற்கேற்ப வடிவமைக்கப்பட்டிருக்கும். பழைய வாகனங்களில் இந்த வசதி இல்லாததால் செயல்திறன் குறைவு மற்றும் பராமரிப்புச் செலவு அதிகரிக்கலாம்.

* எத்தனால் பெட்ரோல் வெளிநாடு – இந்தியா ஓர் ஓப்பீடு
* இந்தியாவில் இ20 பெட்ரோல் மட்டுமே கிடைக்கிறது. சாதாரண பெட்ரோல் மட்டுமின்றி அதிக விலையுள்ள பவர் பெட்ரோலிலும் எத்தனால் கலப்பு உள்ளதாக எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் கூறுகின்றன. வாகன உரிமையாளர்களுக்கு வேறு தேர்வு இல்லை. சாதாரண பெட்ரோல் ரூ.107.77 என்றால், எத்தனால் கலக்காத 100 சதவீத பெட்ரோல் அரிதாக கிடைத்தாலும் விலை சுமார் ரூ.160 ஆக உள்ளது. மேலும், அனைத்து வாகனங்களுக்கும் இது ஏற்புடையதல்ல.

* அமெரிக்காவில் இ10, இ15, இ85 மற்றும் சில இடங்களில் இ0 எனப்படும் எத்தனால் இல்லாத பெட்ரோல் கிடைக்கும். விரும்பப் போல் தேர்வு செய்து கொள்ளலாம்.

* பிரேசிலில் இ30 பெட்ரோல் உள்ளது. இருப்பினும், அங்கு பிளக்ஸ் பியூயல் எனப்படும் 85 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் வாகனங்களும் அதிகம்.

* தாய்லாந்து, ஆஸ்திரேலியாவில் விருப்பம் போல் 100 சதவீத பெட்ரோல் தேர்வு செய்யலாம்.

* பிரிட்டனில் இ10 பெட்ரோல் உள்ளது. இ5 பெட்ரோலும் கிடைக்கும். ஐரோப்பாவில் இ5, இ10 பெட்ரோல் கிடைக்கும்.

* இ20 பெட்ரோலால் இன்ஜினில் நிகழ்வது என்ன?
பல ஆண்டுகளாக வாகனத்துறையில் இருந்த நிபுணர் ஒருவர், இ20க்கு ஏற்ப வடிவமைக்கப்படாத வாகனங்களில் இ20 பெட்ரோலை பயன்படுத்தினால் தொழில்நுட்ப ரீதியாக ஏற்படும் பாதிப்புகளை விவரித்துள்ளார். அவர் கூறுகையில், பெட்ரோலில் இன்ஜின் இயங்கும்போது உள்ளிழுக்கப்படும் காற்றும் சேர்ந்து பெட்ரோல் – காற்று விகிதாசாரம் 1:14.7 என்ற அளவில் இருக்கும். இதற்கேற்பதான் இன்ஜின் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இதற்கு ஸ்டாய்கியோமெட்ரிக் சமநிலை என்கின்றனர். இன்ஜினில் எரிபொருள் எரிப்பு பகுதி, கம்ப்ரஷன், இன்ஜெக்டர், தூய்மையான பெட்ரோலின் அடர்த்தி மற்றும் ஆக்டேன் மதிப்பை கருத்தில் கொண்டு தான் இன்ஜின் வடிவமைக்கப்படுகிறது. இந்த இ20க்கு ஏற்ப வடிவமைக்காத இன்ஜினில் இ20 பெட்ரோல் பயன்படுத்தும்போது காற்று – எரிபொருள் விகிதம் மாறி விடுகிறது. எத்தனால் மூலக்கூறு உள்ள பகுதியில் முழு எரிப்பு நடைபெறாது.

பெட்ரோல் மூலக்கூறு உள்ளபகுதியில் அதிக விசையும், எத்தனால் மூலக்கூறு உள்ள பகுதியில் குறைந்த விசையும் உருவாகும். இந்த சீரற்ற அழுத்தம் காரணமாக பிஸ்டன் செங்குத்தாக அல்லாமல் பக்கவாட்டிலும் அசைந்து அதிர்வுக்குள்ளாகும். இதனால் பிஸ்டன் தேயும். உந்து சக்தியும் குறையும்.

அப்போது வேகத்தை அதிகரிக்க ஆக்சிலேட்டரை அழுத்தும்போது எரிபொருள் நுகர்வு அதிகரித்து மைலேஜ் குறையும்.  மேலும், இன்ஜின் ஆயிலும் மாசடைந்துவிடும். இதனால் ஒரு குறிப்பிட்ட கி.மீ.க்கு ஒரு முறை மாற்ற வேண்டிய ஆயில், உதாரணமாக, 8,000 கி.மீ.க்கு ஒரு முறை மாற்ற வேண்டிய ஆயிலை 4,000 கிமீ-ல் மாற்றவேண்டி வரும் என விவரித்துள்ளார்.

Tags : BJP government ,India ,
× RELATED ரோட்டரி கிளப் ஆஃப் யுனைடெட் சென்னை...