×

பொய் செய்திகள்… ஆபாச வீடியோ… அவதூறு பதிவுகள்… அத்துமீறும் யூடியூபர்களுக்கு கடிவாளம் எப்போது?

 

* உண்மையை விட பொய் எளிதில் சென்றடைவதால் எங்கும் எதிலும் குழப்பம்

செல்போன் பயன்பாடு மற்றும் அதிவேகமாக வளர்ந்து வரும் இன்டர்நெட் பயன்பாடு சமூக வலைதளங்களின் ஆதிக்கம் இவை அனைத்தும் சேர்ந்து இன்று நம்மை வேறு ஒரு உலகத்திற்கு அழைத்து சென்றுள்ளது என்றால் அதனை நம்மால் மறுக்க முடியாது. அந்த அளவிற்கு ஒரு மாய உலகில் நாம் மாட்டிக் கொண்டு எது உண்மை எது பொய் என்று தெரியாமல் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு செய்தியை வெளியிடுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தன. அங்கீகரிக்கப்பட்ட செய்தி நிறுவனங்கள் மற்றும் தொலைக்காட்சி செய்தித்தாள் போன்றவற்றில் வரும் செய்திகளை பொதுமக்கள் பார்த்து அதன் உண்மை தன்மையை புரிந்து கொண்டனர்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் செல்போன் வைத்துள்ள பலரும் யூடியூபர்கள் என்ற போர்வையில் தங்களுக்கு விருப்பமான பதிவுகளை மக்கள் மீது திணிக்கின்றனர். அதில் எது உண்மை, எது பொய் என்பது தெரியாமல் பலரும் குழம்பி ஒரு விதமான குழப்பத்திலேயே இருந்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாகவே யூடியூப் எனப்படும் சமூக வலைத்தளத்தில் பலரும் மிகவும் ஆக்டிவாக செயல்படுகின்றனர். குறிப்பாக, ஒரு யூடியூப் சேனலை தொடங்கி அதில் தங்களுக்கு பிடித்த விஷயங்களை மிகைப்படுத்தி பொதுமக்கள் மீது திணிக்கின்றனர். ஒரு விஷயத்தை அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்துவதாலும், கவர்ச்சிப்படுத்துவதாலும் மக்கள் எளிதில் கவரப்படுகின்றனர்.

இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் யூடியூபர்கள் அதில் வருமானம் பார்த்து அடுத்தடுத்த கன்டென்ட் கிரியேட் செய்து தொடர்ந்து பொதுமக்களை ஒரு விதமான போதையில் வைக்கின்றனர். ஆரம்ப காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட துறைகள் மீது மட்டும் இருந்த இவர்களது ஆதிக்கம் தற்போது பொதுவான செய்திகள், அரசியல், விளையாட்டு, சினிமா, சமையல் என அனைத்திலும் உள்ளே புகுந்து ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஆதிக்கம் செலுத்துவதில் தவறில்லை, ஆனால் அதில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது, என்பதை பார்க்க வேண்டும். அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாகவே யூடியூபர்கள் மிகப்பெரிய ஸ்டார் ஓட்டல் தொடங்கி சாதாரணமாக செயல்படும் கையேந்தி பவன் வரை கேமராவுடன் சென்று உங்களது ஓட்டலில் என்ன ஸ்பெஷல், எந்த பொருள் நன்றாக இருக்கும் என கேட்டு அவரது பேட்டியையும் பதிவு செய்து இந்த ஓடடலில் இந்த உணவு வகை நன்றாக இருக்கும் என பிரபலப்படுத்துகின்றனர்.

அதனை நம்பி பலரும் அந்த ஓட்டலுக்கு சென்று சாப்பிடுகின்றனர். ஆனால் குறிப்பிட்டு ஒரு யூடியூப் சேனலில் வந்ததை நம்பி அவ்வளவு பேர் செல்கின்றனர். அதில் தரம் உள்ளதா? என்றால் அது கேள்விக்குறியாகவே உள்ளது. குறிப்பிட்ட அந்த ஓட்டல் முதலாளிகள் தரும் பணத்திற்காக எந்த ஒரு விஷயத்தையும் ஆராயாமல் அவர்கள் வர சொன்ன நேரத்திற்கு சென்று அவர்கள் கூறுவதை பதிவு செய்து அப்படியே வெளியிடுகின்றனர். கடந்த சில மாதங்களாகவே இது பெரும் சர்ச்சையை கிளப்பி வந்த நிலையில் தற்போது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இதற்கு ஒரு செக் வைத்துள்ளனர். பொதுமக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு தரமான உணவு விநியோகத்தை உறுதி செய்யும் பொருட்டும், உணவு பாதுகாப்புத் துறை ஒரு முக்கிய புதிய அறிவுரை வழங்கி உள்ளது.

அதன்படி புட் ரிவ்யூ செய்வதற்கு முன்பாக கடையில் உணவு பாதுகாப்பு துறை உரிமம் உள்ளதா, முறையான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றப்படுகிறதா என்பதை அறிந்து உணர்ந்து புட் ரிவ்யூ செய்ய வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும், கடையில் பணியாற்றக்கூடிய பணியாளர்கள் முதல் உணவு தயாரிப்பாளர்கள் வரை முறையாக கையுறை மற்றும் தலையுறை உள்ளிட்ட அனைத்தும் அணிந்து பணியாற்றுகிறார்களா, உணவு தயாரிக்கிறார்களா என்பதையும் ஆராய வேண்டும். தொடர்ந்து, கடையில் சுகாதாரமாகவும் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் ஆராய வேண்டும், உள்ளிட்ட வழிகாட்டி நெறிமுறைகளை உணவு பாதுகாப்பு துறை வழங்கியுள்ளது. ஆனால் இதனை எத்தனை யூடியூபர்கள் மதித்து அதன்படி நடப்பார்கள் என்பது கேள்விக்குறியே.

இது குறித்து ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கடந்த சில வருடங்களுக்கு முன்பு வானொலி, தொலைக்காட்சி செய்தித்தாள்கள் ஆகியவற்றின் மூலம் மட்டுமே மக்கள் செய்திகளை அறிந்து வந்தனர். இன்று ஒரு கைபேசி இருந்தால் யார் வேண்டுமானாலும் யூடியூப், முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், எக்ஸ் தளம் போன்ற சமூக வலைதளங்களில் தகவல்களை வெளியிட முடிகிறது. இங்கே ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது யூடியூப் செய்தி வெளியிடுபவர்கள் அனைவரும் பெரும்பாலானோர் ஊடகம் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். அவர்கள் சட்டப்படி பத்திரிகையாளர்களா? இந்த கேள்விக்கான பதில் தெளிவாக இதுவரை வரையறுக்கப்படவில்லை.
2 வருடங்களுக்கு முன்பு ஒரு பிரியாணி கடையில் புரட்டாசி மாதம் தொடங்குவதற்கு முன்பு ஆபர் என ஒரு யூடியூப் சேனலில் போட்டார்கள்.

அதை பார்த்து புரட்டாசி தொடங்குவதற்கு முந்தைய நாள் பலரும் அந்தக் கடையில் பிரியாணி வாங்கி சாப்பிட்டார்கள். 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள் இதற்கு எந்த வகையிலும் அந்த யூடியூப் சேனல் பொறுப்பேற்கவில்லை. ஒரு பத்திரிகையாளர் என்பவர் வெறும் செய்தியை சேகரிப்பவர் மட்டுமல்ல. ஒரு நிகழ்வை நேரில் சென்று ஆய்வு செய்து இருதரப்பினரிடமும் தகவல்களைப் பெற்று அதன் உண்மை தன்மையை உறுதி செய்து பொதுமக்களின் நலன்களை கருத்தில் கொண்டு செய்தியை வெளியிடுபவரே பத்திரிக்கையாளர். ஆனால் யூடியூபர்கள் தொலைக்காட்சிகளில் போகும் செய்திகளை தங்களது செல்போனில் டைப் செய்து அதில் தங்களுக்கு தேவையான கருத்துக்களை மட்டும் எடுத்துக் கொண்டு சில கருத்துக்களை திணித்து வெளியிடுகின்றனர்.

இதன் உண்மை தன்மையை மக்கள் அறியாமல் பலருக்கும் ஷேர் செய்கின்றனர். இது பல நேரங்களில் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. யூடியூபர் என்பவர் தனது யூடியூப் பக்கத்தில் காணொளிகளை வெளியிடும் நபர் அவர் அரசியல் நிகழ்ச்சிகள் சமையல் நிகழ்ச்சிகள் பயண அனுபவங்கள் கல்வி வீடியோக்கள் போன்றவற்றை வெளியிடுகின்றனர். இதில் தவறு இல்லை. ஆனால் சில நேரங்களில் தங்களது ஆதாயத்திற்காக பல தவறான செய்திகளையும் வெளியிடுகின்றனர். யூடியூப் என்பது ஒரு தளம் அது ஒரு பிளாட்பார்ம் பத்திரிகையாளர் என்பது ஒரு தொழில் இந்த இரண்டையும் ஒன்றாக கருத முடியாது. இன்று பலரும் தங்களது யூடியூப் சேனலுக்கு பெயருக்கு முன் பிரஸ் மீடியா நியூஸ் போன்ற வார்த்தைகளை சேர்த்துக் கொள்கின்றார்கள்.‌

சமூக ஊடகங்கள் வாயிலாக சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான மக்களை தற்போது செய்திகள் சென்று சேர்க்கின்றன. இதன் வாயிலாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் போலி செய்திகள் தவறான வதந்திகள் தனிநபர் அவதூறுகள் வெறுப்புணர்வை தூண்டும் பதிவுகள் வேகமாக பதியப்படுகின்றன. இவை சமூக அமைதியும் தனிநபர் உரிமைகளையும் பாதிக்கும் அபாயம் கொண்டவை. இன்று பத்திரிகையாளர் என்று கூறிக்கொள்ளும் பல யூடியூபர்கள் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து அரசு அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் மிரட்டும் தொணியில் பேசுகின்றனர். பணம் பறித்து வருகின்றனர். இவர்களுக்கு யார் முற்றுப்புள்ளி வைப்பது. டிஜிட்டல் ஊடகங்களின் வளர்ச்சி ஜனநாயகத்திற்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. செய்திகள் வேகமாக சென்று சேர்கின்றன.

அதே நேரத்தில் பொறுப்பற்ற தகவல் பரவலும் இதற்கு வழி வகுத்துள்ளது. இனிவரும் காலங்களில் யூடியூபர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும். இதனால் இப்போதே மத்திய, மாநில அரசுகள் யூடியூபர்கள் ஒரு கருத்தை வெளியிடும்போது அதனை எதன் அடிப்படையில் வெளியிடுகிறார்கள் அதன் உண்மை தன்மை போன்றவற்றை எவ்வாறு கண்டறிவது இவர்களை எவ்வாறு வரைமுறைப்படுத்துவது என்பதை தெளிவுபடுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்,’’ என்றார்.

தணிக்கை அவசியம்
சினிமாவில் வன்முறை, ஆபாச காட்சிகளை தணிக்கை செய்வதற்கு தனி துறையே உள்ளது. திரையரங்கு சென்று பணம் கொடுத்து பார்க்கும் திரைப்படத்திற்கு இவ்வளவு கட்டுப்பாடு இருக்கையில், அனைவரின் கையிலும் 24 மணி நேரமும் பயன்பாட்டில் உள்ள யூடியூப் தளத்திற்கு எந்த கட்டுப்பாடும் இருப்பதில்லை. யூடியூப்பில் வீடியோக்களை பதிவிட சில கட்டுப்பாடுகள் இருந்தாலும், அதை பெரும்பாலானோர் மதிப்பதே இல்லை. இதன் காரணமாக ஆபாச மற்றும் வன்முறை உள்ளிட்ட சமூக சீர்கேடு வீடியோக்கள் யூடியூப்பில் அதிகளவில் உள்ளன. எனவே, சிறுவர்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த யூடியூப் தளத்தில் வீடியோக்களை பதிவிட கட்டுப்பாடு விதிக்கும் வகையில் தணிக்கை அவசியம் என்பதை உணர்ந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறுவர்கள் பாதிப்பு
முன்பெல்லாம் குழந்தைகள் விடுமுறை நாட்களிலும், நேரம் கிடைக்கும் போதும் டிவி பார்ப்பார்கள் அல்லது வெளியில் சென்று நண்பர்களுடன் கிரிக்கெட், புட்பால், கண்ணாமூச்சி விளையாடுவார்கள். ஆனால் இன்று குழந்தைகள் வெளியில் சென்று ஓடியாடி விளையாடாமல் செல்போனிலேயே அதிக நேரத்தை செலவிடுகின்றனர். அதிலும் குறிப்பாக குழந்தைகள் செல்போனில் வீடியோ கேம், ஷார்ட்ஸ், ரீல்ஸ் பார்ப்பது என பொழுதைக் கழிக்கிறார்கள். இன்றைய பெற்றோர் சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு செல்போன்களை வாங்கி கொடுத்து விடுவதால் குழந்தைகளும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் செல்போனிலேயே நேரத்தை கழிக்கின்றனர். குழந்தைகள் ஸ்மார்ட்போன்களில் யூடியூப் ஷார்ட்ஸின் மாயப்பிடியில் சிக்கி, அதிக நேரம் செலவழிப்பதுடன், படிப்பு, விளையாட்டு, தூக்கம் என அனைத்தையும் புறக்கணித்து அதிலேயே மூழ்கி கிடக்கின்றனர். இதனால் சிறு வயதிலேயே குழந்தைகள் பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கும், மனநல பிரச்சனைகளுக்கும் ஆளாகின்றனர்.

பெற்றோர்களே உஷார்…
சமூக வலைதளங்களின் பயன்பாடு என்பது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சிறுவர்களும் சமூக வலைதளங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இது, அவர்களுடைய படிப்பு மற்றும் இதர செயல்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக பெற்றோர் தரப்பிலும் புகார் கூறப்பட்டு வருகிறது. குழந்தைகளின் செயல் என்பது அவர்களின் பெற்றோரையும், அவர்கள் வீட்டில் இருக்கும் பெரியோர்களின் செயல்களையுமே ஒத்தியுள்ளது. ஆகவே, குழந்தைகள் செல்போன் அதிகளவில் பயன்படுத்துகிறார்கள் என்றால், யாரை பார்த்து இதை கற்றுக்கொண்டார்கள் என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு கையில் செல்போனை கொடுத்துதான் உணவையே ஊட்டுகிறார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில், குழந்தைகளுக்கு முதலில் செல்போனை அறிமுகப்படுத்துவதே பெறோர்கள்தான். எனவே, பெற்றோர்கள்தான் முதலில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும்.

ஆபாச, வன்முறை காட்சிகள்
இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் அதிகளவில் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். பள்ளி பாடத்திட்டத்தை படிக்க, ஆசிரியர்கள் மற்றும் பிற குழந்தைகளுடன் தொடர்பு கொள்ள, மேலும் பரஸ்பர செயல்பாட்டு கல்வி விளையாட்டு மற்றும் வீடியோ பார்ப்பதற்கு பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், யூடியூப் தளங்களில் சமீப காலமாக வன்முறை, ஆபாச காட்சிகள் நிரம்பியுள்ளது. இவற்றை பார்க்கும் சிறுவர்கள் இளம் வயதிலேயே குற்றச் செயல்களில் ஈடுபட தூண்டப்படுகின்றனர். இதேபோல், பிரபலங்கள் அல்லது அதிக பாலோயர்களை வைத்துள்ள பலர் தங்களது சுய லாபத்திற்காக வெளியிடும் வீடியோக்களை பலரும் நம்பி, அதை பின்பற்றுகின்றனர்.

Tags :
× RELATED குறைந்தது மைலேஜ்… வண்டியும் டேமேஜ்…...