×

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானது குறித்து சர்ச்சை பேச்சு; அமைச்சர் ஆதவ் மீது சிபிஐ வழக்கு? திமுக தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று அவசர விசாரணை

புதுடெல்லி: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மீது சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று திமுக தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் அவசர வழக்காக இன்று விசாரிக்கிறது. அப்போது, அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மீது வழக்கு பதிவு செய்ய சிபிஐக்கு உத்தரவிடப்படுமா? என்பது தெரியும். கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி நடைபெற்ற நடிகர் விஜய் பங்கேற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார பொதுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு நீதிபதியான அஜய் ரஸ்தோகியின் நேரடி கண்காணிப்பில் சிபிஐ அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். இதுபோன்ற சூழலில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் த.வெ.கவில் கடந்த வாரம் இணைந்தனர். இந்த இணைப்பு விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். அதில், ”எங்களுக்கு கரூர் கணக்கு ஒன்று உள்ளது. அதனை முடிக்காமல் விட மாட்டோம்.

கரூரில் கூட்ட நெரிசலை காவல்துறையை வைத்து உருவாக்கினார்கள். விஜய் மீதே கை வைத்தீர்களே, மக்களை கொன்று குவித்தீர்களே. அதற்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம் என்று தெரிவித்திருந்தார். இது மிகப்பெரிய சர்ச்சையாகியது. இதைத்தொடர்ந்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக தாக்கல் செய்திருந்தார். அதில், ”கரூர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொதுவெளியில் சட்டத்திற்கு புறம்பான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

இது வழக்கின் விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். சாட்சிகளை கலைப்பதற்கான வழிவகையை உருவாக்கும். மேலும் கரூர் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு, கருணை அடிப்படையிலான அரசு வேலை, அரசாணைகள் மற்றும் பிற நலத்திட்ட உதவிகளை வழங்க மாநில அரசுக்கு சுதந்திரம் இருந்தாலும், சிபிஐ விசாரணை நடைபெறும் காலத்தில், உச்ச நீதிமன்றம் வகுக்கும் நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டே அவை வழங்கப்பட வேண்டும்.

இதைத்தவிர அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு, இந்த விவகாரத்தில், சாட்சிகளை மிரட்டுதல், செல்வாக்கு செலுத்துதல் மற்றும் விசாரணைக்குத் தடையாக இருத்தல், பொது அறிக்கைகள் வெளியிட்டது ஆகிய அனைத்தையும் அடிப்படையாக கொண்டு புகார் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். குறிப்பாக தற்போதைய வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில், நீதியின் நலன் கருதியும், விசாரணையின் நேர்மை, சுதந்திரம் மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் நோக்கிலும், உச்ச நீதிமன்றம் பொருத்தமான மற்றும் சரியான நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

மேலும் குறிப்பாக கரூர் வழக்கில் சி.பி.ஐ விசாரணை இன்னமும் முடியவில்லை. மேலும் அந்த வழக்கில் விசாரணை வளையத்தில் இருக்கும் முதல்வர் ஜோசப் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த், சி.டி.ஆர் நிர்மல் குமார் ஆகிய அனைவரும் பொதுவெளியில் கரூர் சம்பவம் தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்க கூடாது என்று தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசானுதீன் அனுமனுல்லா மற்றும் ஷீல் நகு ஆகியோர் அமர்வில் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அசீபா அகமதி ஒரு முறையீட்டை முன்வைத்தார்.

அதில், ”கரூரில் 41பேர் உயிரிழந்த விவகாரத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழக்கின் சாட்சிகளிடம் தாக்கத்தை ஏற்படுத்த முயல்கிறார். சிபிஐ விசாரணையில் இருக்கும் ஒரு வழக்கு குறித்து பொதுவெளியில் பேசி வருகிறார். இது சட்ட விதிகளுக்கு எதிரானதாகும். மேலும் இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே தற்போது இருக்கும் சூழலை அடிப்படையாகக் கொண்டு எங்களது தரப்பில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து திமுக தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், இதுதொடர்பான வழக்கை நாளை(இன்று) பட்டியலிட்டு விசாரித்து உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து, திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு நீதிபதி கே.வி.விஸ்வநாதன் அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது. அப்போது, சர்ச்சை பேச்சு தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்வது குறித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. வரும் 10ம் தேதி முதல்வர் விஜய் கரூர் செல்லவிருக்கும் சூழலில், உச்ச நீதிமன்றம் இன்று பிறப்பிக்கும் உத்தரவானது மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

* அமைச்சரின் பேச்சு சாட்சிகளை கலைப்பதற்கான வழிவகையை உருவாக்கும் என திமுக குற்றச்சாட்டு.

* அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை.

* விசாரணை வளையத்தில் இருப்பவர்கள் பொதுவெளியில் கரூர் சம்பவம் தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்க தடை விதிக்கவும் வலியுறுத்தல்.

Tags : Karur ,CBI ,Minister ,Aadhav ,Supreme Court ,DMK ,New Delhi ,Aadhav Arjuna ,
× RELATED தேசிய உணவுப் பாதுகாப்பு...