×

சென்னை மாதவரத்தில் சாலையில் கார் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு

சென்னை: மாதவரத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி காரில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது தீ விபத்து நேரிட்டது.

சென்னை மாதவரத்தில் உள்ள செயின்ட் ஆன்ஸ் கல்லூரி அருகே, பயிற்சி வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றி எரிந்தது. ‘ஜே எஸ் ஓட்டுநர் பள்ளி’ (J.S. Driving School) என்ற தனியார் வாகன பயிற்சி நிலையத்திற்குச் சொந்தமான அந்த காரில், வாடிக்கையாளர்களுக்கு கார் ஓட்டும் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தபோது திடீரென கரும்புகை எழுந்துள்ளது.

உடனே காரில் இருந்தவர்கள் கீழே இறங்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து உடனடியாக மாதவரம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் கார் முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. இந்த கார் எதனால் தீப்பற்றி எரிந்தது என்பது குறித்து மாதவரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து நடந்த போது காலை நேரம் என்பதால் பெரும் அசம்பாவிதம் எதுவும் நிகழவில்லை. நல்வாய்ப்பாக உயிர்ச் சேதமும் தவிர்க்கப்பட்டது. ஆனாலும், கல்லூரி அருகே கார் தீப்பிடித்து எரிந்த இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

Tags : Madhavaram, Chennai ,Chennai ,Madhavaram ,St. Ann's College ,
× RELATED நெல்லை இரட்டைக் கொலை வழக்கில் மூலச்சி பகுதியை சேர்ந்த நபர் கைது