×

விவசாய கூலி ஆட்கள் கிடைக்காததால் அதிக பராமரிப்பு இல்லாத தென்னை வளர்ப்பில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்

 

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாய வேலைக்கு போதிய கூலி ஆள் கிடைக்காத காரணத்தால் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகள் இளநீர், தென்னை பயிர் செய்வதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக விவசாயத்தில் பல்வேறு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர்‌. இதன் அடிப்படையில் பல்வேறு பகுதிகளில் நெல், கரும்பு, வாழை சாகுபடி செய்த இடங்களில் இன்று தென்னை செய்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தமட்டில் விவசாய தொழிலுக்கு போதிய ஆள் கிடைப்பதில்லை.

கத்தரி, தக்காளி, வெண்டை, அவரை, கீரை, காய், கனிகள் பயிர் செய்ய வேண்டுமானால் போதுமான அளவிற்கு கூலி வேலைக்கு ஆட்கள் கிடைக்க வேண்டும். ஆனால் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தினால் விவசாய கூலி ஆட்கள் கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளது. இதே கருத்தில் கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏராளமான பகுதிகளில் தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தென்னை விவசாயத்தில் பெரிய அளவிற்கு ஆட்கள் தேவை இல்லை. விவசாய கூலி ஆட்கள் தேவை இல்லை என்பதாலும், மிகப்பெரிய கவனிப்பு அவசியம் இல்லை என்பதாலும் தென்னை சாகுபடியில் விவசாயிகள் விரும்பம் காட்டுகின்றனர்.

அதிலும் தற்போது சொட்டு நீர் பாசன முறை கடைபிடிக்கப்படுவதால், இன்னமும் சுலபமாக பராமரிக்க முடிகிறது. தற்ேபாது ஒன்றிய அரசு திருத்தப்பட்ட விபி ஜி ராம்ஜி வேலை வாய்ப்பு திட்டம் அறிவித்துள்ள நிலையில், இத்திட்டத்தின் கீழ் பணி செய்யும் தொழிலாளர்களை விவசாய கூலி வேலைக்கு அனுப்பி கூலி தொகையை அரசு 50% விவசாயிகள் 50% செலுத்தினால் போதுமான ஆட்கள் கிடைக்க வசதியாக அமையும். விவசாயிகள் 3 ஆண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கு பயன் தரக்கூடிய நெட்டை, குட்டை தென்னை ரகங்களை அதிகமாக தேர்வு செய்து வருகின்றனர். இளநீர் மற்றும் தேங்காயின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதிலும், தற்போது தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் உடலுக்கு நல்ல பலன் தரக்கூடிய இளநீர் விரும்பி அருந்துவதால் இளநீர் தேவை மிகவும் அதிகரித்து வருகிறது. இதனால் தென்னை விவசாயம் என்பது தற்போது நல்ல லாபம் தரும் விவசாயம் என்பதை விவசாயிகள் நம்புகின்றனர். இதனால் தென்னை விவசாயம் வருங்காலங்களில் செழித்து வளர வாய்ப்பு உள்ளது. தற்போது உள்ளூர் இளநீர் வகைகள் ரூ.35-க்கும், பொள்ளாச்சி இளநீர் ரூ.60க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது தேங்காய் ஒரு கிலோ ரூ.70 வரை விற்பனை செய்யப்படுவதால் வருங்காலத்தில் இன்னும் நல்ல விலை கிடைக்கும் என்று எண்ணத்தில் விவசாயிகள் பெரும்பாலும் தென்னை விரும்புகின்றனர். மற்ற சாகுபடியை போல தென்னையில் அதிக கூலி ஆட்கள் தேவை இல்லை என்றாலும், அதிலும் ஆட்பற்றாக்குறை அவ்வப்போது ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண்பதற்கு மாவட்ட விவசாயிகள் ஆலோசித்து வருகின்றனர்.

ஊடுபயிர்
தென்னையில் ஊடுபயிராக சோளம் நிலக்கடலை மாட்டு தீவனம் மற்றும் பூச்செடிகள் இதன் அடிப்படையில் புதுக்கோட்டையில் சாகுபடி அதிகரித்து வருகிறது. நெல், சோளம், நிலக்கடலை, கொள்ளு, தட்டைப்பயறு, மரவள்ளிக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, சேப்பங்கிழங்கு, இஞ்சி, மஞ்சள், நேப்பியர் வீரிய இரகங்கள் மற்றும் கினியா புல் போன்றவற்றினை ஊடு பயிராக இடலாம். ஒவ்வொரு பயிருக்கும் தேவையான அளவு, தனித்தனியாக உரமளிப்பதன் மூலம் அதிக மகசூல் பெற முடியும்.

தீவனப் பயிர்கள் முறையே நேப்பியர் வீரிய இரகங்கள், கினியா புல் இதனுடன் பருப்பு வகை தீவனப் பயிர்கள் அதிக லாபத்தை தருகின்றன. ஒரு ஹெக்டரில் பயிரிடப்படும் தீவனப் பயிர்களானது மூன்று பால் தரும் மாடுகளுக்குத் தேவையான தீவனப்பயிரை தருகிறது. இந்த மாடுகளில் இருந்து கிடைக்கும் எருவினை மண்ணில் இடுவதால் மண்ணின் வளம் அதிகரிக்கிறது. இவ்வகையான கலப்புப் பயிர் சாகுபடி முறை அதிக இலாபம் மற்றும் மகசூல் பெறுவதற்கு மிகவும் ஏற்றதாக உள்ளது.

Tags : Pudukottai ,
× RELATED விட்டு விட்டு பெய்யும் மழையால்...