சென்னை: ரூ.35 கோடி ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய விஜயபாஸ்கர் வழக்குகளை அரசு முடக்ககூடாது என அறப்போர் ஜெயராம் தெரிவித்துள்ளார்.
அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் அளித்த பேட்டி:
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது பல்வேறு ஊழல் புகார்களைக் கூறி வருகிறீர்கள். அறப்போர் இயக்கத்திடம் இதற்கான ஆதாரங்கள் என்னென்ன உள்ளன? நான் சொல்லக்கூடிய குற்றச்சாட்டுகள் அனைத்துமே புலனாய்வு மற்றும் அரசு அமைப்புகளின் அதிகாரப்பூர்வ ஆவணங்களின் அடிப்படையில் அமைந்தவைதான்; எதுவும் ஆதாரமில்லாதவை அல்ல.
குட்கா பொருளைச் சட்டவிரோதமாக விற்பனை செய்ய, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடம் இருந்து மட்டும் மாதந்தோறும் ரூ.14 லட்சம் லஞ்சம் பெற்றதாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மாதவராவ் வருமான வரித்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். வருமான வரித்துறை சோதனையில் கைப்பற்றப்பட்ட கணக்கு ஆவணங்களிலும் ‘HM’ (HEALTH MINISTER) என்ற பெயரில் ரூ.14 லட்சம் கொடுக்கப்பட்டதற்கான பதிவுகள் உள்ளன. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ, அவர் ரூ.3.25 கோடி லஞ்சம் பெற்றுள்ளார் என நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளது.
நமது மாநில லஞ்ச ஒழிப்புத்துறை, விஜயபாஸ்கர் மீது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக ரூ.27 கோடிக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. பின்னர், ரூ.35 கோடி அளவிற்கு அவர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து குவித்துள்ளார் என்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு மிக முக்கிய காரணமே விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட இடங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனைதான். அப்போது, பல்வேறு அமைச்சர்களுக்கு ரூ.13 கோடி வரை பணத்தை பிரித்துக் கொடுத்ததற்கான பட்டியல் சிக்கியதுடன், ரூ.5 கோடி ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆனால், இந்த புகார்களை விஜயபாஸ்கர் தரப்பு மறுக்கிறதே?
அவர் மறுக்கலாம், ஆனால் உண்மைகளை மறைக்க முடியாது. குட்கா வழக்கில் மாதவராவ் கொடுத்த வாக்குமூலமும், கைப்பற்றப்பட்ட டைரி குறிப்புகளும் போலியானவை அல்ல. அதிமுக மற்றும் பா.ஜ. கூட்டணியில் இருந்த காலத்திலேயே, ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் சிபிஐ தான் விஜயபாஸ்கர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. வருமான வரித்துறை சோதனையின்போது, அதிகாரிகள் முன்னிலையிலேயே டிரான்ஸ்பர் மற்றும் போஸ்டிங் வாங்குவதற்காகப் பெறப்பட்ட லஞ்சப் பணம்தான் அது என்று ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.
இவை அனைத்தும் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஆவணங்களாக இருக்கும்போது, இதனை எப்படி வெறும் ‘அரசியல் பழிவாங்கல்’ என்று கூற முடியும்?
விஜயபாஸ்கர் அமைச்சராவதற்கு முன்பே தங்களது குடும்பத்தினர் குவாரி மற்றும் கல் நிறுவனங்கள் போன்ற தொழில்களைச் செய்து வந்ததாகக் கூறுகிறாரே? தொழில் ரீதியாக ஈட்டிய வருவாய்க்கும், நீங்கள் கூறும் சொத்துக்குவிப்பிற்கும் உள்ள சட்டப்பூர்வ வேறுபாட்டை லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியுமா?
இதனை நிரூபிக்க வேண்டியது லஞ்ச ஒழிப்புத்துறையின் கடமை. இது அறப்போர் இயக்கம் தனிப்பட்ட முறையில் தொடர்ந்த வழக்கு அல்ல, அரசு அமைப்பான லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை. விஜயபாஸ்கர் தற்போது தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்துள்ளார். ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை, தங்களது சொந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகிக்கு எதிரான வழக்கை நீதிமன்றத்தில் எப்படிச் சரியாகக் கொண்டு செல்லும்? வழக்கை முடக்குவதற்கோ அல்லது முடித்து வைப்பதற்கோதானே வாய்ப்புகள் அதிகம்?
அறப்போர் இயக்கம் இந்த புகார்களை கொடுத்தாலும், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள் நடத்தினாலும், வழக்குகள் இறுதி நிலையை எட்டாமல் இவ்வளவு தாமதமாவதற்கு என்ன காரணம்?
முன்னாள் அமைச்சர் வேலுமணி வழக்கை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த, நாங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு மேல் வழக்கு தொடர்ந்து, இரண்டாவது முறை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட்ட பிறகுதான் அது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நிலையை எட்டியது.
பா.ஜ.வை பொறுத்தவரை, ஆரம்பத்தில் அதிரடியாக சோதனை நடத்துவார்கள், ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்துவார்கள். ஆனால், இறுதிவரை வழக்கை நடத்தி தண்டனை வாங்கி தரமாட்டார்கள். அதற்குள் அவர்களுக்கிடையே ஒரு அரசியல் அண்டர்ஸ்டாண்டிங் ஏற்பட்டுவிடும். இந்த அமைப்புகளையும், அரசியல் டீலிங்குகளையும் தாண்டித்தான் மக்களுக்காக நாங்கள் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது. அறப்போர் இயக்கம் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியையோ அல்லது நபர்களையோ மட்டுமே இலக்கு வைத்துச் செயல்படுவதாக ஒரு விமர்சனம் வைக்கப்படுகிறதே? தற்போதைய ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் குறித்து உங்களது பார்வை என்ன?
தற்போது நாங்கள் முன்வைக்கும் விமர்சனமே தற்போதைய ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் குறித்ததுதான். த.வெ.க கட்சி ‘நாங்கள் மாற்றத்தைக் கொண்டு வருவோம்’, ‘கமிஷன் வாங்க மாட்டோம்’, ‘பார்ட்டி ஃபண்ட் வாங்க மாட்டோம்’ என்று கூறி அரசியலுக்கு வந்ததை நாங்கள் வரவேற்றோம். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே, குட்கா ஊழல் போன்ற வழக்குகளில் சிக்கிய, பார்ட்டி ஃபண்ட் கொடுப்பதில் சிறந்து விளங்கிய விஜயபாஸ்கரை கட்சியில் இணைத்துக் கொள்கிறார்கள். இது என்ன மாதிரியான மாற்றம்? எங்களுடைய நோக்கம் ஊழலற்ற நிர்வாகமே தவிர, எந்தக் குறிப்பிட்ட கட்சியும் அல்ல.
விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்தது தம் மீதான சொத்துக்குவிப்பு மற்றும் ஊழல் வழக்குகளிலிருந்து தப்பிப்பதற்காகத்தான் என்று உறுதியாகக் கூறுகிறீர்களா? அறப்போர் இயக்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
ஊழல் வழக்குகளிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், தங்களது அரசியல் செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்ளவும்தான் அவர்கள் கட்சி மாறுகிறார்கள். விஜயபாஸ்கர் விவகாரத்தில், ஏற்கனவே நீதிமன்ற உத்தரவின்படிதான் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. எனவே, இதில் பொதுமக்கள் என்ற முறையில் எங்களது நேரடி சட்டப் போராட்டம் தற்போதைக்கு இல்லை என்றாலும், இந்த வழக்குகளை அரசாங்கம் முடக்காமல், தொடர்ந்து நடத்துவதற்கான அழுத்தங்களை நாங்கள் தொடர்ந்து கொடுப்போம். ஒருவேளை வழக்குகளைச் சட்டத்திற்குப் புறம்பாக முடிக்க நினைத்தால், அப்போது எங்களுடைய சட்டரீதியான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்போம்.
