மும்பை: அரசுக்கு எதிராக கோஷமிட்டதற்காக சமூக ஆர்வலரை மும்பை நகருக்குள் நுழைய தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் சோசியலிஸ்ட் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் மாநில பொதுச்செயலாளரான சயீத் அகமது அப்துல் வாஹித் சவுத்ரி, குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, பாபர் மசூதி இடிப்பு, ஞானவாபி மசூதி விவகாரம் மற்றும் எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு எதிராக மும்பையின் செம்பூர் பகுதியில் போராட்டங்களை நடத்தினார்.
இந்த போராட்டங்களின் போது ‘பாஜக ஒழிக’, ‘அமித்ஷா ஒழிக’ போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாகக் கூறி, கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் செம்பூர் துணை போலீஸ் கமிஷனர், சயீத் அகமதுவை 12 மாதங்கள் மும்பை மற்றும் அதன் புறநகர் எல்லைக்குள் நுழைய தடை விதித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவையும் கொங்கண் மண்டல ஆணையர் கடந்த மார்ச் மாதம் உறுதி செய்தார். இந்த தடை உத்தரவு தனது அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாகக் கூறி சயீத் அகமது மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி மாதவ் ஜாம்தார், சயீத் அகமது மீதான தடை உத்தரவை முற்றிலும் ரத்து செய்து அதிரடி தீர்ப்பளித்தார்.
நீதிபதி தனது தீர்ப்பில், ‘ஒன்றிய அரசின் கொள்கைகளை எதிர்ப்பதும், அதற்கு எதிராக கோஷமிடுவதும் குடிமக்களின் அரசியலமைப்புச் சட்டப்படியான அடிப்படை உரிமையாகும். இதற்காக ஒருவரை அவரது சொந்த நகரத்திலிருந்து வெளியேற்ற முடியாது. நாட்டில் தற்போது பல தேர்வுத்தாள் கசிவு பிரச்னைகள் நடந்து வருகின்றன. அதற்கு எதிராக மக்கள் போராடினால், அவர்கள் மீது வழக்கு போடுவீர்களா? குடிமக்கள் அனைவரும் ஒன்றிய அரசின் அடிமைகள் கிடையாது. போராட்டம் நடத்துவது அவர்களின் உரிமை. போலீசார் பொதுமக்களுக்குத்தான் பொறுப்பானவர்களே தவிர, அரசியல் தலைவர்களுக்கு அல்ல’ என்று கடுமையாகக் குறிப்பிட்டார். மேலும், அரசியல் லாபத்திற்காக அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறிய நீதிபதி, சயீத் அகமது மீதான தடை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
