எரிபொருள் கூடுதல் கட்டணத்தை குறைத்துள்ள ஏர் இந்தியா; சர்வதேச விமானக் கட்டணங்கள் குறைய வாய்ப்பு

டெல்லி: மேற்கு ஆசியாவில் மோதல் தொடங்கியதிலிருந்து கடந்த 4 மாதங்களாக பெரும்பாலான சர்வதேச வழித்தடங்களில் விதிக்கப்பட்டு வந்த மிக அதிக விமானக் கட்டணங்களிலிருந்து பயணிகளுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்கவுள்ளது.

இதற்கான அறிகுறியாக விமானக் கட்டணத்தின் முக்கிய அங்கமான எரிபொருள் கூடுதல் கட்டணத்தை (fuel surcharge), ஏர் இந்தியா நிறுவனம் ஜூலை 1 முதல் குறைத்துள்ளது. ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து வழித்தடங்களுக்கான சர்வதேச எரிபொருள் கூடுதல் கட்டணத்தை 38%, ஆஸ்திரேலியா மற்றும் வட அமெரிக்க வழித்தடங்களுக்கான கட்டணத்தை 28.5% என ஏர் இந்தியா குறைத்துள்ளது. இதன் காரணமாக சர்வதேச விமான கட்டணங்கள் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் விமான எரிபொருள் (ATF) விலை குறைந்ததைத் தொடர்ந்து, இந்த கட்டண குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. விமான இயக்கச் செலவுகள் அதிகரித்ததால் கடந்த ஏப்ரல் மாதம் இந்த கட்டணம் உயர்த்தப்பட்டிருந்த நிலையில், தற்போது அது குறைக்கப்பட்டுள்ளது.

விமான எரிபொருள் (ATF) விலை குறைப்பு மற்றும் எரிபொருள் கூடுதல் கட்டணங்களைக் குறைக்கும் ஏர் இந்தியா போன்ற விமான சேவை வழங்கும் நிறுவனங்களின் நடவடிக்கைகளால் சர்வதேச விமானக் கட்டணங்கள் குறைய வாய்ப்புகள் உள்ளன.

Related Stories: