நீடாமங்கலம், ஜூலை 2: சனிக்கிழமைகளில் மட்டும் மாதாந்திர மின் பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு செய்வதற்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரைமின் வினியோகம் தடை செய்து மின்சார பணியாளர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அலுவலக வேலை நாட்களில் தடை செய்யும் போது அலுவலக பணிகள் பாதிக்கின்றது. மேலும் வங்கி, பத்திரப்பதிவு, வட்டார வளர்ச்சி, வட்டாட்சியர் அலுவலங்களில் கணினி தொடர்பு துண்டிக்கப்பட்டு மக்களுக்கான சேவைகள் பாதிக்கப்படுகிறது. இணையவழி துண்டிக்கப்படுவதால் கற்றல் தடை ஏற்படுகிறது.
எரிபொருள் தட்டுப்பாடு உள்ள இந்த நேரத்தில் அலுவலக பணிகளுக்கு டீசல் அதிக அளவு பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. முக்கிய ஆவணங்களை ஜெராக்ஸ் எடுப்பது உள்ளிட்ட அனைத்தும் பாதிக்கப்படுகின்றது. பொதுமக்கள், வர்த்தகர்கள், மாணவர்கள், மட்டுமல்லாமல் அலுவலக பணிகள் பாதிக்கப்படுவதை தவிர்க்க இனி வரும் மாதங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளை சனிக்கிழமைகளில் மட்டும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க மின்சார வாரியம் முன்வரவேண்டும் என்று நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
