×

ஒப்பந்த பணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும்‌ நீர்வளத்துறை அமைச்சர்‌ ஆனந்த், ஒப்பந்த பணிகளுக்கான ஒப்பந்ததாரர்கள் பதிவு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு: ஒப்பந்த பணிக்கான ஒப்பந்ததாரர் என்பவர் ஒரு தனிநபராகவோ, கூட்டாண்மை நிறுவனமாகவோ, நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகவோ, பதிவு செய்யப்பட்ட சங்கமாகவோ அல்லது அரசால் இயற்றப்பட்ட சட்டங்களின் கீழ் அமைக்கப்பட்ட, தனித்துவமான சட்டப்பூர்வ அங்கீகாரம் கொண்ட மற்றும் 1872ம் ஆண்டின் இந்திய ஒப்பந்த சட்டத்தின்படி ஒப்பந்தம் செய்துகொள்ளும் தகுதிவாய்ந்த பிற அமைப்பாகவோ இருக்கலாம்.

மாவட்டத்திற்குள் உள்ள அனைத்துக் கொள்முதல் அமைப்புகளுக்குமான ஒப்பந்ததாரர்களின் பதிவானது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் செய்யப்பட வேண்டும். ஒப்பந்ததாரர்கள் எந்த பகுதியில் ஒப்பந்த புள்ளிகளில் பங்கேற்க விரும்புகிறார்களோ, அதன் அடிப்படையில் பதிவு செய்துகொள்ளலாம். ஒப்பந்ததாரர்கள் 3 வகுப்புகளாக வகைப்படுத்தப்படுவார்கள்.

ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒப்பந்தப்புள்ளிகளில் பங்கேற்பதற்கான நிதி வரம்பு, அவர்கள் சமர்ப்பிக்கும் தகுதி ஆவணங்கள் மற்றும் விண்ணப்பதாரரின் அனுபவம்/செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.  நிதித் திறன்: ஒப்பந்ததாரர், முந்தைய பத்து நிதியாண்டுகளில் ஏதேனும் ஒரு நிதியாண்டில், தான் பதிவு செய்யக் கோரும் மதிப்பில் 20%க்கு இணையான சரக்கு மற்றும் சேவைகள் பரிவர்த்தனை செய்திருக்க வேண்டும்.

ஒப்பந்ததாரர், தான் பதிவு செய்யக் கோரும் மதிப்புக்கு சமமான அல்லது அதற்கு அதிகமான ஆண்டு வருமானம் கொண்டிருத்தல் வேண்டும். இத்துடன் தணிக்கை செய்யப்பட்ட நிதி அறிக்கைகள் மற்றும் தணிக்கை சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். பதிவு செய்யக் கோரும் ஒப்பந்ததாரர், தற்போதைய தேதி வரை சரக்கு மற்றும் சேவைகள் (ஜிஎஸ்டி) மற்றும் வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்திருக்க வேண்டும்.

எந்தவொரு மாவட்டத்திலும் பதிவு செய்யாத ஒரு ஒப்பந்ததாரரும், ஒப்பந்தப்புள்ளியில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் தகுதி வரம்புகளையும் பூர்த்தி செய்யும் பட்சத்தில், பதிவு செய்யாத ஒப்பந்ததாரராக ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்கலாம்.  ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்தப்புள்ளியை வெல்லும் பட்சத்தில், நிர்ணயிக்கப்பட்ட பிணைத் தொகைக்கு இணையான தொகையை, திரும்பப் பெற முடியாத வங்கி உத்திரவாத வடிவில் ‘பாதுகாப்பு வைப்புத்தொகையாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பப் படிவங்களை tnrd.gov.in என்ற இணையதளத்திலிருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை இதர ஆவணங்களுடன் சேர்த்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் நேரடியாகவோ அல்லது பதிவுத் தபால்/இணையவழி மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (தனிநபர், கூட்டாண்மை நிறுவனம் மற்றும் தனியுரிமை வரம்பிற்குட்பட்ட நிறுவனம் – நிறுவனத்தின் பங்குதாரர்கள் அல்லது இயக்குநர் குழு உறுப்பினர்கள் அனைவரும் ஆதிதிராவிடர்/பழங்குடியினராக இருத்தல் வேண்டும்).

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (கலப்புத் திருமணம் செய்த தம்பதியர்). சுய உதவிக் குழுக்கள்/ ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வேலையில்லாத கட்டுமானப் பொறியியல் பட்டதாரிகள், கட்டுமானப் பொறியியல் பட்டையப் படிப்பு படித்தவர்கள் (பதிவு செய்யக் கோருவதற்கு முந்தைய 5 ஆண்டுகளுக்குள் படிப்பை முடித்திருக்க வேண்டும்).

சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் வேலையில்லாத பட்டதாரி, கட்டுமான பொறியியல் பட்டைய படிப்பு படித்தவர்கள் ஆகியோருக்கு வருமான வரி, சரக்கு மற்றும் சேவைகள் வரி சான்றிதழ் சமர்ப்பிப்பதிலிருந்தும் மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்துவதிலிருந்தும் விலக்கு அளிக்கப்படும். ஆனால், இவர்கள் ரூ. 5 லட்சம் வரையிலான மதிப்புள்ள பணிகளுக்கு மட்டுமே தகுதி உடையவர்கள் ஆவர்; மேலும் இவர்களுக்கு வழங்கப்படும் பணிகளின் ஒட்டுமொத்த மதிப்பு எந்தவொரு காலகட்டத்திலும் ரூ.10 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Tags : Chennai ,Minister ,Anand ,Chennai Secretariat ,
× RELATED முன்னாள் எம்பி அன்வர் ராஜாவின்...