×

வேலை வாங்கி தருவதாக ரூ.23 லட்சம் மோசடி வழக்கு கைதான இளஞ்செழியனுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை: முன்னாள் அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

சென்னை: சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (65) என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில், தமிழக போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக அரியலூரை சேர்ந்த இளஞ்செழியன் (60) என்பவர் கடந்த 2023ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரையிலான காலத்தில் மொத்தம் ரூ.23 லட்சம் பெற்றார். ஆனால் சொன்னபடி எனது மகனுக்கு வேலை வாங்கி தரவில்லை.

இதுகுறித்து கேட்டதற்கு அவர் என்னை அமைச்சர் சிவசங்கரனிடம் நேரடியாக அழைத்து சென்றார். அப்போது அவர் ‘பயப்பட வேண்டாம் வேலை கட்டாயம் கிடைக்கும் என்று’ உறுதி அளித்தார். அனால் இதுவரை எனது மகனுக்கு வேலை கிடைக்கவில்லை. எனவே பணத்தை பெற்று, மோசடி செய்த இளஞ்செழியன் மற்றும் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்து இருந்தார்.

அந்த புகாரின்படி கடந்த 24ம் ேததி, பணம் பெற்று மோசடி செய்ததாக இளஞ்செழியனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை மத்திய குற்றப்பிரிவு அளித்த சம்மனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சிவசங்கர் நேற்று காலை 10 மணிக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உதவி கமிஷனர் சரண்யா மற்றும் இன்ஸ்பெக்டர் ஞானசித்ரா ஆகியோர் முன்பு ஆஜரானார்.

அவரிடம் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. பின்னர் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது: அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி வழக்கில் இளஞ்செழியன் என்பவர் கைதாகி, அவர் அளித்த தகவலின் அடிப்படையில், காவல் துறையினர் என்னை விசாரணைக்கு அழைத்தார்கள். நானும் விசாரணைக்கு ஆஜராகி அவர்கள் கேட்ட கேள்விக்கு உரிய பதில் அளித்துள்ளேன்.

இளஞ்செழியன் எனக்கு உதவியாளராக பணி புரியவில்லை, இளஞ்செழியனுக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை, அவர் யார் என்றே எனக்குத் தெரியாது. புகார் அளித்தவர் என்னுடன் செல்போனில் பேசியதாக கூறியுள்ளார். அப்படி பேசியிருந்தால் குரல் பரிசோதனை செய்யுங்கள். நான் அதற்கும் தயாராக இருக்கிறேன். என்னை மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் வர தயாராக இருக்கிறேன்.

Tags : Ilanchezhiyan ,Former Minister ,Sivashankar ,Chennai ,Srinivasan ,MGR Nagar ,Chennai Police Commissioner ,Ariyalur ,Tamil Nadu ,
× RELATED முன்னாள் எம்பி அன்வர் ராஜாவின்...