×

மங்களூர் – சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலின் டீசல் டேங்கில் திடீரென கோளாறு: பயணிகள் அவதி

சென்னை: மங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த விரைவு ரயிலில் கோளாறு காரணமாக ஆவடியில் அவசரமாக நிறுத்தபட்டது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பழுது சரி செய்ய முடியாததால், மாற்று ரயில்கள் மூலம் சென்னை செல்லுமாறு ஊழியர்கள் பயணிகளிடம் தெரிவித்தனர்.

மங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆவடி ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டது. இது குறித்து ரயில்வே ஊழியர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விரைந்து வந்து பழுதை நீக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகியும் பழுதைச் சரிசெய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் அதிருப்தியடைந்த நூற்றுக்கணக்கான பயணிகள், ஆவடியில் இருந்து புறநகர் மின்சார ரயில்களில் ஏறி, கடும் கூட்ட நெரிசலுக்கு இடையே தங்களது பயணத்தைத் தொடர்ந்தனர். இதனால் சென்னை நோக்கிய ரயில் போக்குவரத்து தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டது.

அதே பாதையில் வந்து கொண்டிருக்கும் மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் மாற்றுப் பாதைக்கு திருப்பி விடப்பட்டு வருகின்றன. வாரத்தின் வேலை நாளில் திடீரென ஏற்பட்ட இந்த ரயில் கோளாறு காரணமாக, ஆவடி ரயில் நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது கடும் போக்குவரத்து நெரிசலும் நெருக்கடியான சூழலும் ஏற்பட்டுள்ளது. இதனால் அலுவலகம் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குச் செல்வோர் பெரும் அவதிக்குள்ளாகினர்.

Tags : Mangalore ,Chennai Express ,Chennai ,Chennai Central ,Avadi ,Chennai.… ,
× RELATED மருத்துவர்கள் அனைவரையும் தேசிய...