ஊத்துக்கோட்டை: பெரியபாளையத்தில் புகழ்பெற்ற பவானி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என பல்வேறு பகுதிகளில் இருந்து கார், பேருந்து, வேன், ஜீப், லாரி, ஆட்டோ, மாட்டு வண்டி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்து செல்கிறார்கள். அவ்வாறு வருபவர்கள் சனிக்கிழமை இரவு தங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை பொங்கல் வைத்து, மொட்டையடித்து, வேப்பிலை ஆடை அணிந்து கோயிலை வலம் வந்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.
இந்நிலையில், இம்மாதம் 17ம் தேதி ஆடி மாதம் தொடங்க உள்ள நிலையில், 10 வாரங்கள் ஆடித்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இவ்விழாவிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து பவானி அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்வார்கள். அவ்வாறு கோயிலுக்கு வரும் பக்தர்கள் வேப்பிலையை உடலில் சுற்றிக்கொண்டு தங்கள் நேர்த்திகடனை செலுத்துவார்கள். இந்நிலையில், நேற்று பெரியபாளையம் அரசுப்பள்ளியில் நடந்த போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு வந்த கும்மிடிபூண்டி தவெக எம்எல்ஏ விஜயகுமார் நிகழ்ச்சியை முடித்துவிட்டு பள்ளியில் இருந்து வெளியே வந்தபோது, பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் வளாகத்தில் வளையல் கடை, பொரிகடை, வேப்பிலை ஆடை வியாபாரிகள் மற்றும் சிறு கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகள் எம்எல்ஏவை பார்த்ததும் அவரை கோயில் உள்ளே வேப்பிலை ஆடை அணியும் இடத்திற்கு அழைத்துச்சென்று முற்றுகையிட்டு `எங்கள் கடைகளுக்கு மின்சார வசதி இல்லை.
தற்போது கோயிலை சுற்றி ரூ.159 கோடி மதிப்பில் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் எங்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்கவில்லை. மேலும், இதுவரை எங்களின் சிறு கடைகளுக்கு வரி செலுத்தியது இல்லை. இப்போது கோயில் நிர்வாகத்தினர் வரி செலுத்த சொல்கிறார்கள்’ என சராமரி கேள்வி எழுப்பினர். இதைக்கேட்ட எம்எல்ஏ, கோயில் நிர்வாகிகளிடம் பேசுகிறேன் என கூறிவிட்டு வேறு எதுவும் பேசாமல் சட்டென காரில் ஏறி சென்றார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
