திருத்தணி: தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்கு ஆந்திராவிலிருந்து எடுத்து செல்லும் கிராவல் மண், லாரிகளிலிருந்து பறக்கும் மண் தூசி மற்றும் அதிவேகத்தை கண்டித்து கனகம்மாசத்திரம் மக்கள் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூர் முதல் திருத்தணி பொன்பாடி வரை 4 வழி சாலையாக விரிவுப்படுத்தும் பணிகள் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் நடைபெற்று வருகிறது. சாலையில் கிராவல் மண் கொட்டி சாலையை சமன் செய்யவும், உயர்மட்ட பாலம், சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளுக்கு அதிக அளவில் கிராவல் மண் பயன்படுத்தப்படுகிறது.
இதற்காக கனகம்மாசத்திரம் அருகே ஆந்திர மாநிலம் மகாராஜபுரம் பகுதியில் செயல்படும் குவாரியிலிருந்து தினமும் 100க்கும் மேற்பட்ட லாரிகளில் கிராவல் மண் நிரப்பிக்கொண்டு கனகம்மாசத்திரம் பஜார் வழியாக தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு எடுத்து செல்லப்படுகிறது.
அதிக பாரத்துடன் வேகமாக செல்லும் கனரக லாரிகள் கிராவல் மண் தார்பாய் மூடாமல் எடுத்து செல்வதால், கனகம்மாசத்திரம் பஜாரில் பொதுமக்கள் மீது தூசி பறந்து கண் எரிச்சல் ஏற்படுகிறது. மேலும் அப்பகுதிகளில் உள்ள கடைகளில் மண் நிரம்புகிறது. இந்நிலையில், நேற்றும் அதுபோல் லாரிகள் கிராவல் ஏற்றியபடி பொதுமக்களுக்கு இடையூறாக சென்றன.
மக்கள் கூட்டம் நிறைந்த பஜாரில் அதிக வேகத்துடன் லாரிகள் சென்றதால் விபத்து அபாயம் ஏற்படும் சூழலும் நிலவியது. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் 50க்கும் மேற்பட்டோர் லாரிகளை சிறைப்பிடித்தனர். அப்போது ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து பொதுமக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். லாரிகள் மீது தார்பாய் மூடி செல்லவும், சாலையில் தூசி பறக்காமல் இருக்க டிராக்டர் மூலம் சாலையில் தண்ணீர் தெளிக்க, வேகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறியதை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு திரும்பி சென்றனர்.
