×

குன்னூர் அம்மா உணவகத்தை புனரமைக்க ரூ.4 லட்சம் போதாது கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை

 

குன்னூர், ஜூலை 1: குன்னூர் அம்மா உணவகத்தை புனரமைக்க ஒதுக்கப்பட்ட ரூ.4 லட்சம் போதுமானதா? என கேள்வி எழுந்துள்ளது. கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய அந்த பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் காணொலி வாயிலாக அம்மா உணவகம் திறந்து வைக்கப்பட்டது. ஏழை, எளிய மக்கள் மற்றும் தொழிலாளர்களுக்குப் பசியாற்றும் மையமாக விளங்கும் இந்த உணவகம் திறக்கப்பட்டு 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தற்போது கட்டிடத்தின் பல்வேறு பகுதிகள் சேதமடைந்து காணப்படுகின்றன.

குறிப்பாக, நீண்ட நாட்களாக பராமரிப்பின்றி இருக்கும் இந்த உணவகத்தில் சமையலறை மற்றும் கைகழுவும் இடங்களில் உள்ள டைல்ஸ்கள் உடைந்துள்ளன. மின் இணைப்புகள் பழுதடைந்து மின்கம்பிகள் ஆபத்தான நிலையில் உள்ளன. கட்டிடத்தின் உள்வடிவமைப்பு மற்றும் மேற்கூரைகள் சேதமடைந்துள்ளன என பல்வேறு குறைபாடுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. பொதுமக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து, குன்னூர் நகராட்சி சார்பில் இந்த அம்மா உணவகத்தைப் புனரமைப்பதற்காக ரூ.4 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளன. இருப்பினும், கட்டிடத்தின் சேத மதிப்புடன் ஒப்பிடுகையில் இந்தத் தொகை மிகவும் குறைவு எனப் புகார்கள் எழுந்துள்ளன.

பழுதடைந்த மின் இணைப்புகள், உடைந்த டைல்ஸ்கள் மற்றும் சமையலறையை முழுமையாகச் சீரமைக்க இந்த ரூ.4 லட்சம் நிதி எட்டாக்கனியாகவே இருக்கும் எனத் தெரிகிறது. ‘‘தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி, மேற்பூச்சு வேலைகளுக்கே சரியாக இருக்கும். முழுமையான மற்றும் தரமான புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள இந்தத் தொகை போதாது. எனவே, தமிழ்நாடு அரசும், நகராட்சி நிர்வாகமும் உடனடியாகக் கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்து, ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா உணவகத்தைத் தரமான முறையில் சீரமைக்க வேண்டும்’’ என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags : Coonoor ,Amma Canteen ,Coonoor, Nilgiris district ,
× RELATED வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தை 5...