ஊட்டி, ஜூலை 8: பருவ மழையால் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் கூடலூர், பந்தலூர் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளது. ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி ெசப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை காலமாகும். இந்தாண்டுக்கான தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் துவங்கியது.ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு பெய்யவில்லை. அவ்வப்போது பகலில் மட்டும் சில நாட்கள் கனமழை பெய்தது. அதுவும் ஊட்டி, மஞ்சூர் என சில பகுதிகளில் மட்டுமே பெய்தது. இதனிடையே தெற்கு குஜராத் முதல் கேரளா வரை நிலவும் காற்றழுத்த தாழ்வு பாதை மற்றும் வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் பகுதிகள், ஊட்டி சுற்று வட்டார பகுதிகள், குந்தா வட்டத்திற்குட்பட்ட நீர்பிடிப்பு பகுதிகளான அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.50 கிமீ., வேகத்தில் பலத்த காற்று வீசுவதால் பல்வேறு இடங்களிலும் வீடுகள், கட்டிடங்கள் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்தன. அடிக்கடி மின் துண்டிப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
இதனிடையே கூடலூர்,பந்தலூர் பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ள நிலையில் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழை தீவிரமடைந்துள்ள நிலையில் பாதுகாப்பு கருதி கூடலூர் மற்றும் பந்தலூர் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் ேநற்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்த சூழலில் நீலகிரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள வயநாட்டின் மேப்பாடி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு பலர் அதில் சிக்கி உள்ளனர். மீட்பு பணிகள் துரித கதியில் நடைபெற்று வரும் சூழலில் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன. அனைத்து துறைகளும் உஷார்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில்
நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையளவு மிமீ., (நேற்று காலை 8 மணி நிலவரப்படி) : ஊட்டி 1.8, நடுவட்டம் 11, கிளன்மார்கன் 6, பார்சன்ஸ்வேலி 12, போர்த்திமந்து 44, அவலாஞ்சி 71, எமரால்டு 14, அப்பர்பவானி 36, கூடலூர் 66, அப்பர் கூடலூர் 68, தேவாலா 76, செருமுள்ளி 83, பாடந்தொரை 80, பந்தலூர் 63 என மொத்தம் 805 மிமீ., மழை பதிவாகியுள்ளது.
