பாஸ்டன்: உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ரவுண்ட் ஆப் 32 சுற்றில் அமெரிக்காவின் பாஸ்டன் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் 4 முறை சாம்பியனான ஜெர்மனியுடன் பராகுவே அணி மோதியது. பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் துவக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க மல்லுக்கட்டினர். ஆனால் இரு அணிகளின் தடுப்பாட்ட வீரர்களின் அதிரடியால் கோலாக மாறவில்லை. இதனால் முதல் பாதி கோல் ஏதுவுமின்றி முடியும் என எதிர்ப்பார்த்த நிலையில், 42வது நிமிடத்தில் பராகுவே அணியின் ஜூலியோ என்கிசோ கோல் அடிக்க 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் வீரர்களை மாற்றும் படலத்தை தீவிரப்படுத்தி கோல் அடிக்க ஜெர்மனி முயன்றது. இதில் ஜெர்மனியின் இல்கை ஹவெர்ட்ஸ் கோல் போட 1-1 என்ற கணக்கில் ஆட்டம் சமநிலைக்கு வந்தது. 2வது பாதி இறுதியில் இரு அணிகள் கோல் போடாததால் சமன் நிலையில் முடிந்தது. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் இரு அணிகளும் கோல் போட முடியாததால், பெனால்டி ஷூட் அவுட் முறை கொண்டுவரப்பட்டது. முதல் ஷூட் அவுட் செய்த ஜெர்மனி அணி கோல் அடிக்க தவறியது.
இதை பயன்படுத்தி பராகுவே கோல் அடித்து பெனால்டியில் முன்னிலை பெற்றது. அடுத்த ஒரு வாய்ப்புகளில் இரு அணிகளும் கோல் அடித்தன. நான்காவது ஷூட் அவுட்டில் இரு அணிகளும் கோல் அடிக்க தவறின. 5வது வாய்ப்பில் இரு அணிகளும் கோல் போட 4-3 என்ற கணக்கில் பராகுவே அணி வென்றது. இதன்மூலம் ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு பராகுவே முன்னேறியது. 4 முறை உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஜெர்மனி அணி நடப்பு தொடரில் இருந்து வெளியேறியது ஜெர்மனி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
ஜெர்மனி அணி கடந்த 1954, 1974, 1990, 2014 ஆகிய ஆண்டுகளில் உலகக்கோப்பையை வென்றதிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், 2014ம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற பிறகு 2018, 2022ல் லீக் சுற்றுடன் வெளியேறிய ஜெர்மனி அணி, இந்த தொடரில் ரவுண்ட் ஆப் 32 சுற்றுடன் வெளியேறி உள்ளது. அதேநேரத்தில் 2010ம் ஆண்டு உலகக்கோப்பையில் காலிறுதி வரை முன்னேறி பராகுவே அணி, 2014, 2018, 2022 ஆகிய 3 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறவில்லை. 16 ஆண்டுகளுக்கு பின் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்ற பராகுவே அணி, ஜெர்மனிக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்து வெளியேற்றி உள்ளது.
* நெதர்லாந்து வெளியேறியது ரவுண்ட் ஆப் 16க்கு மொராக்கோ தகுதி
மெக்சிகோவில் நடந்த ரவுண்ட ஆப் 32 சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து-மொராக்கோ அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2வது பாதியில் 72 நிமிடத்தில் நெதர்லாந்து ஒரு கோல் போட, 91வது நிமிடத்தில் மொராக்கோ வீரர் இசா தியோப் ஒரு கோல் போட்டார். இதனால் 1-1 என்று ஆட்டம் டிரா ஆனது. இதைத்தொடர்ந்து கூடுதல் நேரத்தில் இரு அணிகளும் கோல் போடாததால் பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் 3-2 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி மொரோக்கோ வென்று ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறியது.

* பிரேசிலுக்கு பயம் காட்டிய ஜப்பான்
ரவுண்ட் ஆப் 32 சுற்றில் பிரேசில் மற்றும் ஜப்பான் அணிகள் இடையேயான ஆட்டம் ஹூஸ்டன் மைதானத்தில் நடந்தது. ஆட்டத்தின் 29 நிமிடத்துல் ஜப்பான் ஒரு கோல் போட்டு முன்னிலை வகித்தது. 2 பாதியில் 56வது நிமிடத்தில் பிரேசில் ஒரு கோல் போட 1-1 என்று சமன் நிலை ஆனது. கடைசி வரை இரு அணிகளும் கோல் போடாததால், கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதில் பிரேசிலுன் கேப்ரியல் மார்டினெலி கோல் அடிக்க 2-1 என்ற கணக்கில் பிரேசில் முன்னிலை பெற்றது. இறுதியில் ஜப்பான் கோல் ஏதும் போடாததால் 2-1 என்ற கணக்கில் பிரேசில் வென்றது.
