ஏ.வி.சி. ஆண்கள் கோப்பை வாலிபால் தொடர்; பஹ்ரைனை வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்ற இந்தியா

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏ.வி.சி. ஆண்கள் கோப்பை வாலிபால் தொடரில், வெண்கல பதக்கத்திற்கான போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி நடப்பு சாம்பியனான பஹ்ரைனை எதிர்கொண்டது. இதற்கு முன்னதாக நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், ஆசியாவின் வலுவான அணிகளில் ஒன்றான இந்தோனேசியாவை எதிர்கொண்ட இந்திய அணி 2-3 என நூலிழையில் தோல்வியடைந்து இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்தது.

ஐந்து செட்கள் வரை நீண்ட அந்த ஆட்டத்தில் இந்தியா 25-15, 24-26, 20-25, 25-19, 13-15 என கடைசி வரை போராடி தோற்றது. இந்தநிலையில் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஆரம்பம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. முதல் செட்டை 25-23 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்ற, 2வது செட்டில் 23-25 என பஹ்ரைன் கைப்பற்றியது. அதன்பின்னர் ஆக்ரோஷமாக விளையாடிய இந்திய அணி வீரர்கள், 3வது செட்டை 25-21 மற்றும் 4வது செட்டை 25-17 என்ற கணக்கில் வென்று 3-1 என்ற கணக்கில் பஹ்ரைனை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அரையிறுதியில் ஏமாற்றம் அடைந்த போதிலும், வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் நடப்பு சாம்பியனான பஹ்ரைனை வீழ்த்தி, ஏ.வி.சி. ஆண்கள் கோப்பை வாலிபால் தொடரில் வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது.

Related Stories: