×

தவெக பெண் தொண்டர்களை இழிவாக பேசிய விவகாரம்; அரசியல் விமர்சகர் பொன்ராஜுக்கு எதிராக இறுதி அறிக்கை தாக்கல் செய்ய தடை நீட்டிப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு

 

சென்னை: தவெக பெண் தொண்டர்களை இழிவாக பேசியதாக பொன்ராஜுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கூடாது என்ற இடைக்கால உத்தரவை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக பேட்டியளித்த பெண் தொண்டர்களை இழிவாக விமர்சித்ததாக அரசியல் விமர்சகரும், அப்துல் கலாம் ஆலோசகருமான பொன்ராஜுக்கு எதிராக கடந்த மார்ச் 26ம் தேதி தற்போதைய அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜ்குமார் ஆகியோர் அளித்த புகார்களின் அடிப்படையில் மே 12ம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும், கடலூர் போலீசாரும் வழக்குகள் பதிவு செய்திருந்தனர்.

இந்த இரு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி பொன்ராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுக்களுக்கு பதிலளிக்குமாறும் இந்த வழக்குகள் தொடர்பாக இறுதி அறிக்கை தாக்கல் செய்யக் கூடாது என்றும் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த மனுக்கள், நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, பதில்மனு தாக்கல் செய்ய காவல் துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்று, ஜூலை 6ம் தேதி வரை அவகாசம் வழங்கி, விசாரணையை ஒத்திவைத்த நீதிபதி, பொன்ராஜுக்கு எதிரான வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யக் கூடாது என்ற இடைக்கால உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டார்.

Tags : Tamil Nadu Congress ,Ponraj ,Chennai ,Madras High Court ,Vijay… ,
× RELATED மீண்டும் மதமாற்ற தடைசட்டமா? பாஜ...