×

மனமகிழ் மன்றங்களுக்கான கட்டணம் இருமடங்கு உயர்வு

 

சென்னை: தமிழகத்தில் மனமகிழ் மன்றங்களுக்கான சிறப்புரிமைக் கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் வெளிநாட்டு மதுபானம் விற்பதற்கு வெவ்வேறு விதமான உரிமங்கள் தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையரகத்தால் வழங்கப்படுகிறது. இவற்றில் இதில், எப்.எல்.2 வகை உரிமத்தின் கீழ் இயங்கும் மனமகிழ் மன்றங்களில் மதுபான வகைகளை இருப்பு வைத்து, அந்த மன்றங்களின் உறுப்பினர்களுக்கும் அவர்களின் விருந்தினர்களுக்கும் விற்பனை செய்யப்படும். குறிப்பாக, வெளிநாட்டு மதுபானங்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் எனச் சொன்னாலும் இந்த மன்றங்களில் சாதாரண மதுபானங்களும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த மன்றங்கள் காலை 11 மணி முதல் இரவு 11 மணிவரை செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் 800க்கும் மேற்பட்ட மனமகிழ் மன்றங்கள் செயல்பட்டு வருகிறது. மனமகிழ் மன்றங்களுக்கான சிறப்புரிமைக் கட்டணம் சென்னையில் ரூ.15 லட்சமும் பிற பகுதிகளுக்கு ரூ.10 லட்சமும் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மனமகிழ் மன்றங்களுக்கான சிறப்புக் கட்டணங்களை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை மாநகரில் மனமகிழ் மன்றங்களுக்கு ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், 10 லட்சத்திற்கும் மேல் மக்கள் தொகை உள்ள மாநகராட்சிகளில் ரூ.25 லட்சமும், 10 லட்சத்திற்கும் கீழ் மக்கள் தொகை உள்ள மாநகராட்சிகளுக்கு ரூ.20 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நகராட்சிகளுக்கு ரூ.15 லட்சமும் மற்ற பகுதிகளுக்கு ரூ.10 லட்சமும் நிர்ணயம் செய்யப்பட்டு அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. அதேநேரம், அனைத்துப் பகுதிகளுக்கும் விண்ணப்பக் கட்டணம் ரூ.10,000 எனவும் உரிமக் கட்டணம் ரூ.30,000 எனவும் அந்த அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த சிறப்புக் கட்டண உயர்வு 2026, ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்ததாகக் கருதப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தவெக அரசு அமைந்தது பள்ளிகள், வழிபாட்டு தலங்களுக்கு அருகில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்ட்டது. ஆனால், மனமகிழ் மன்றங்களையும் மூடவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், தற்போது மனமகிழ் மன்றங்களுக்கான சிறப்புரிமைக் கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Chennai ,Tamil Nadu ,Tamil Nadu Prohibition and Excise Commission ,
× RELATED மீண்டும் மதமாற்ற தடைசட்டமா? பாஜ...