×

வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போடுவதில் பிரச்னை வெடித்தது திருவனந்தபுரம் மாநகராட்சியில் கடும் ரகளை, மோதல்: பாஜ கவுன்சிலரின் சட்டை கிழிந்தது, 4 பேர் காயம்

 

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாநகராட்சியில் 35வது வார்டு பாஜ கவுன்சிலரான சுகதன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தொடர்ந்து 3 மாநகராட்சி கூட்டங்களில் கலந்து கொள்ளாததால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ், இடதுசாரி கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அலுவலகத்திற்கு வந்த மேயர் வி.வி.ராஜேஷை கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் அலுவலகத்திற்குள் நுழைய விடாமல் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட மோதலில் மேயர் வி.வி. ராஜேஷ், துணை மேயர் ஆஷாநாத் உள்பட 15 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில் திருவனந்தபுரம் மாநகராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்போவதாக காங்கிரஸ் தெரிவித்திருந்தது. இதற்கு இடதுசாரி கூட்டணியின் ஆதரவை காங்கிரஸ் கோரியது. ஆனால் அதை இடதுசாரி கூட்டணி ஏற்கவில்லை. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படுமா என்ற பரபரப்புடன் நேற்றைய மாநகராட்சி கூட்டம் தொடங்கியது. சமீபத்தில் காலமான பிரபல மலையாள நடிகர் சலிம்குமாருக்கு இரங்கல் தெரிவித்து கூட்டம் தொடங்கியது.

கூட்டம் தொடங்கிய உடனேயே மேயர், துணை மேயர் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் கூட்ட அரங்கின் மையப்பகுதிக்கு வந்து கோஷமிட்டனர். அப்போது செம்பழந்தி உதயன் என்ற பாஜ கவுன்சிலர் வருகைப் பதிவேட்டை காங்கிரஸ் கவுன்சிலர்களிடமிருந்து பறிக்க முயன்றார். இதற்கு காங்கிரஸ் கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது அவர்களிடையே கடும் அடிதடி, மோதல் ஏற்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் கவுன்சிலர்களான ஷெர்லி, அனிதா அலெக்ஸ் மற்றும் பாஜ கவுன்சிலர்களான செம்பழந்தி உதயன் மற்றும் அர்ச்சனா ஆகியோர் காயமடைந்தனர். செம்பழந்தி உதயனின் சட்டை கிழிந்தது. இந்த சம்பவத்தால் திருவனந்தபுரம் மாநகராட்சி கூட்ட அரங்கு போர்க்களம் போல ஆனது. இந்த மோதல்களால் மாநகராட்சி கூட்டம் 5 நிமிடங்களில் முடிந்து விட்டது.

Tags : Thiruvananthapuram Corporation ,BJP ,Thiruvananthapuram ,Sugathan ,Ward 35 ,Congress ,
× RELATED பெட்ரோல், டீசல் விற்பனைக்கான...