- அயோத்தி ராம் கோயில்
- உச்ச நீதிமன்றம்
- புது தில்லி
- அயோத்தி ராம் கோயில் அறக்கட்டளை
- உத்திரப்பிரதேசம்
- பொதுச் செயலாளர்
- சம்பத் ராய்
புது டெல்லி: உத்தர பிரதேசத்திலுள்ள அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளைக்குப் பக்தர்கள் அளித்த காணிக்கையில் ரூ.7 கோடிக்கும் அதிகமான பணத்தை அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் மற்றும் அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் தங்களது பதவிகளை அண்மையில் ராஜினாமா செய்தனர். கோயிலுக்கு வந்த நன்கொடை நிதியில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, குற்றத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று இந்த ராஜினாமாவை அளித்துள்ளனர். இதுதொடர்பாக கோயிலில் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக சிபிஐ விசாரணை கேட்டு அவசர மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஷீல் நாகு அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்களில் ஒருவரான அஜய் குமார் ராய் நேரில் ஆஜராகி, விரைவான விசாரணைக்கு வலியுறுத்தியதுடன், முறைகேடு புகார்கள் மீதான தற்போதைய விசாரணையில் திருப்தியில்லை என தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில், உத்தரப் பிரதேச மாநிலத்தின் சார்பில் மூத்த கூடுதல் தலைமை வழக்கறிஞரும், மூத்த வழக்கறிஞருமான சரண் தேவ் சிங் தாக்கூர் ஆஜரானார். அப்போது நீதிபதிகள்,’ கோடைக்கால விடுமுறைக்குப் பிறகு விசாரணையை வைத்துக்கொள்ளலாம். இந்த வழக்கில் என்ன அவசரம் இருக்கிறது. இதற்காக வானம் ஒன்றும் இடிந்து விழுந்துவிடப் போவதில்லை’ என்று குறிப்பிட்டனர்.
இதற்கிடையே, ராமர் கோயில் நன்கொடை திருட்டு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரும் மேலும் 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். குற்றம்சாட்டப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை விண்ணப்பிக்கவில்லை என அரசு வக்கீல் தெரிவித்துள்ளார்.
* வக்கீல்களுக்கு ரூ.5 லட்சம் அபராதம்
காணிக்கை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட 8 பேர் சார்பாகத் தங்கள் சங்க உறுப்பினர்கள் யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாட மாட்டார்கள் என்றும், சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் அயோத்தியில் உள்ள பைசாபாத் வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்தது.இந்த புறக்கணிப்பு முடிவை மீறிச் செயல்படும் உறுப்பினர்களுக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று அயோத்தி வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது.
மேலும், கோயில் நிர்வாகத்துடன் தொடர்புடையவர்களாக இருந்தும் முதல் தகவல் அறிக்கையில் பெயர்கள் குறிப்பிடப்படாத சம்பத் ராய், அனில் மிஸ்ரா மற்றும் கோபால் ராவ் ஆகியோர் அயோத்தியை விட்டு வெளியேற வேண்டும் என்றும் சங்கம் வலியுறுத்தியது. சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தையும் அணுகவுள்ளதாகச் சங்கத் தலைவர் கலிகா பிரசாத் தெரிவித்தார்.
* பிரதமர், உ.பி. முதல்வர் பதவி விலக போராட்டம்
அயோத்தி ராமர் கோயில் நன்கொடை நிதியில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பதவி விலகக் கோரி காங்கிரஸ் கட்சியினர் நேற்று பெங்களூருவில் போராட்டம் நடத்தினர். இந்த முறைகேடு புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் பவன் அருகே கூடிய போராட்டக்காரர்கள், பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளை ஏந்தியும், மோடி மற்றும் ஆதித்யநாத் முகமூடிகளை அணிந்தும் அவர்களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
* அயோத்தி ராமர் கோயிலுக்கு இன்று செல்கிறது காங்.குழு
அயோத்தி ராமர் கோயில் நிதியில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக சர்ச்சை நிலவி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழுவினர் இன்று அயோத்திக்குச் சென்று கோயிலில் வழிபாடு நடத்தவுள்ளனர். உபி மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் தலைமையில் செல்லும் இந்த குழுவில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கிஷோரி லால் சர்மா (அமேதி), ராகேஷ் ரத்தோர் (சீதாபூர்), உஜ்வல் ராமன் சிங் (பிரயாக்ராஜ்) மற்றும் தனுஜ் புனியா (பராபங்கி) ஆகியோர் இடம்பெறுவர். பராபங்கி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. கௌதம், முன்னாள் மேலவை உறுப்பினர் தீபக் சிங், மகாராஜ்கஞ்ச் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீரேந்திர சௌத்ரி மற்றும் பராபங்கி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மிதா கௌதம் ஆகியோரும் இக்குழுவுடன் செல்வார்கள்.
