திருமலை: தெலங்கானா மாநிலம் ஐதராபாத் போரபண்டா பரத்நகர் பகுதியை சேர்ந்தவர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் (51), கார் டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர மறுஆய்வு பட்டியலில் இவரது பெயர் விடுபட்டிருந்ததாக தெரிகிறது. கடந்த 2002ம் ஆண்டு வாக்களித்த உறவினரின் இணைப்பு விவரம் இல்லாததால் முஜிபுர் ரஹ்மான் கவலையடைந்தார். எஸ்.ஐ.ஆர் பட்டியலில் தனது பெயர் இல்லாததால் போலீசார் தன்னை கைது செய்யக்கூடும் என அவர் அஞ்சினார்.
தான் சிறைக்கு சென்றால், தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளை யார் கவனித்து கொள்வார்கள் என பதற்றமடைந்து பலரிடமும் புலம்பி வந்தாராம். அவரை பலரும் சமாதானப்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் வீட்டில் இருந்த முஜிபுர் ரஹ்மான் திடீரென அங்குள்ள அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம். இதையறிந்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த போரபண்டா போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு விசாரித்து வருகின்றனர்.
