×

பட்டினப்பாக்கம் வீட்டில் முதல்வரை சந்தித்து பேசினேன் 2 மதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய சொன்னார் விஜய்: வைகோ பேட்டியால் அரசியல் களத்தில் பரபரப்பு

சென்னை: நேரடியாக குதிரை பேரத்தில் முதல்வர் விஜய் ஈடுபட்டதாகவும், மதிமுகவுடன் டீல் பேசியது அம்பலமாகி இருக்கும் தகவல் வைகோ பேட்டியின் மூலம் வெட்ட வெளிச்சமாகி இருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் அனல் பறக்க தொடங்கியுள்ளது. மதிமுக பொதுக்குழு கூட்டம் அண்ணா நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுகவில் இருந்து மதிமுக வெளியேறுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், கூட்டத்தை தொடர்ந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று அளித்த பேட்டி:

திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என பொதுக்குழு உறுப்பினர்கள் பேசினர். அனைத்து பொதுக்குழுவினர் வரவேற்பு அளித்து தீர்மானம் நிறைவேற்றினர். முன்னாள் அமைச்சர் ஆ.ராசா எங்கள் கட்சியை தவறாக பேசினார். இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மதிமுகவில் வெற்றி பெற்றனர். ஆனால் உயர்நிலை சிறப்பு குழுவில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் கலந்துகொள்ளவில்லை. நான் மதிமுக உறுப்பினர் இல்லை. திமுக உறுப்பினர் என ஊடகத்துக்கு நேற்றே பேசி இருக்கிறார்.

கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தி.மு.ராஜேந்திரன் இன்று பொதுக்குழுவுக்கு வரவில்லை. ஆனால் மதிமுக உறுப்பினராக செயல்படுவேன். நான் விலகவில்லை என விளக்கம் அளித்துள்ளார். சட்டமன்ற செயல்பாடுகளை வைத்து தான் முடிவு எடுப்பதாக கடையநல்லூர் எம்எல்ஏ கூறி இருக்கிறார். பாஜ தமிழகத்தில் ஆட்சி அமைத்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். ஐயூஎம்எல், விசிக ஆதரவு கொடுத்து அமைச்சர்கள் ஆனார்கள். நாங்கள் தவெகவுக்கு ஆதரவு தரவில்லை.

ஆனால் ஏன் எங்களை கேவலமாக பேசுனீர்கள்? நாங்கள் என்ன செய்தோம்? இரு நாட்களுக்கு முன் நடந்த திருமணத்தில் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தேன். என் அருகே சோபாவில் இடம் இருந்தும் அமராமல் இருந்தார். ஏன் என்று தெரியவில்லை. ஆனால் அவர் சீமானிடம் பேசிக் கொண்டிருந்தார். அதன்பிறகு அவர் என் பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை. கூட்டணியில் இருந்தபோது திமுக மீது விமர்சனம் வைத்தது இல்லை. திமுக ஆட்சியை பாராட்டி இருக்கிறேன்.

இனி திமுகவுடன் தோழமை நீடிப்பது சாத்தியமற்றது என்ற முடிவுக்கு மதிமுக வந்துள்ளது. எங்கள் இயக்கத்தில் இருந்து வெளியேறிய முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் (மல்லை சத்யா), எங்கள் மீது அபாண்டமான பொய்களையும், பழிகளையும் சுமத்தி வருகிறார். முதல்வர் விஜய்யிடம் ரூ.50 கோடி வாங்கியதாக கூறி இருக்கின்றார். 1996ல் இருந்து சொத்து கணக்கு கொடுத்து இருக்கிறேன். ஆனால் என் குடும்பம் மீது பழி சுமத்துகிறார்கள். முன்பு ஜெயலலிதாவிடம் பணம் வாங்கி விட்டதாக இப்படி பேசினர்.

இடைத்தேர்தல் வரும் நேரத்தில் முடிவு எடுக்கும் போது தவெக ஆட்சிக்கு ஆதரவாக இருப்போம். தவெக அரசு மும்மொழி கொள்கையை எதிர்க்கிறது. தற்போதைய அரசு அண்ணா கொள்கையை பின்பற்றி வருகிறது. நான் முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் கேட்டேன், உடனே அவர் நேரம் ஒதுக்கினார். பட்டினப்பாக்கம் இல்லத்தில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முதல்வர் விஜய்யை சந்தித்து பேசினேன். அப்போது அவர் எனக்கு ஒரு உத்தரவாதம் கொடுத்தார்.

மதிமுகவின் இரண்டு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யும் பட்சத்தில் மீண்டும் தேர்தல் வரும்போது அவர்களுக்காக நான் பரப்புரை செய்கின்றேன் என்று முதல்வர் விஜய் கூறினார். நீங்கள் எங்கு சொல்றீங்களோ அங்கு வந்து நான் உங்களுடைய வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்வதாக என்னிடம் விஜய் வாக்கு கொடுத்தார். அதிலும், மதிமுக வேட்பாளர்களை வெற்றிபெற செய்வது என் பொறுப்பு எனவும் முதல்வர் விஜய் என்னிடம் கூறினார்.

ராஜினாமா செய்யச்சொல்வது குதிரை பேரம் என்று சொல்ல முடியாது. தவெக தவறு செய்தால் சுட்டிக் காட்டுவோம். டெல்லி சிறப்பு பிரதிநிதி குறித்து கருத்து சொல்ல மாட்டேன். துரை வைகோ திருச்சியில் மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். அதன் காரணமாக வரவில்லை. திருச்சி கிழக்கில் நான் போட்டியிடவில்லை. பாஜவுக்கு ஆதரவாக தவெக அரசு செயல்பட்டால் அதை நாங்கள் எதிர்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

வைகோ தனது பேட்டியில், எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தால் அவர்களை வெற்றி பெறச் செய்வது எனது பொறுப்பு என்று முதல்வர் விஜய் உறுதி அளித்துள்ளதாக கூறியிருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் தவெக நடத்திய குதிரை பேரத்தில் நேரடியாக முதல்வர் விஜய் ஈடுபட்டிருப்பது வைகோ மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது என்று சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் தெறிக்க தொடங்கியுள்ளது. வைகோவுடன் விஜய், நேரடியாக டீல் பேசிய தகவல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Chief Minister ,Pattinapakkam ,MDMK ,Vijay ,Vaiko ,Chennai ,Anna Nagar… ,
× RELATED மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டம்;...