×

குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பது அரசின் பொறுப்பு; பள்ளிகள், குழந்தைகள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: ஐநாவில் இந்தியா வலியுறுத்தல்

ஐநா: பள்ளிகள், குழந்தைகள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என ஐநாவில் இந்தியா வலியுறுத்தி உள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நேற்று முன்தினம், “ஆயுத மோதல்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான கல்வியை பாதுகாத்தல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல்: கொள்கை அளவிலான உறுதிமொழிகளிலிருந்து பயனுள்ள செயல்பாடுகள் வரை” என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இதில் ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ஹரிஷ் பர்வதனேனி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய ஹரிஷ் பர்வதனேனி, “பொறுப்பு கூறல் இல்லாத பாதுகாப்பு முழுமையற்றது. தண்டனைகளுக்கு அஞ்சாமல் பள்ளிகளையும், குழந்தைகளையும் குறி வைத்து தாக்குதல் நடத்துபவர்களுக்கு பொறுப்பு கூறல் வேண்டும். குழந்தைகள் மற்றும் ஆயுத மோதல்கள் குறித்த ஐநா சபை பொதுசெயலாளரின் சமீபத்திய அறிக்கையொன்று, 2025ம் ஆண்டில் ஆயுத மேதல்களின்போது குழந்தைகளுக்கு எதிரான மீறல்கள் அதிர்ச்சி தரும் அளவை எட்டியுள்ளன. இதில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஐநா 38,558 கடுமையான மீறல்களை உறுதிப்படுத்தி உள்ளது. இவை 24,174 குழந்தைகளை பாதித்துள்ளன. இத்தகையை கடுமையான மீறல்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை, இந்த திட்டம் (அ) கண்காணிப்பு பணிகள் தொடங்கியதிலிருந்தே பதிவானவற்றில் மிக அதிகமாகும். உலகளவில் 6 குழந்தைகளில் ஒருவருக்கும் அதிகமானோர், அதாவது 473 மில்லியன் குழந்தைகள் மோதல் மண்டலங்களில் வசிக்கிறார்கள் அல்லது அங்கிருந்து வௌியேறி கொண்டிருக்கிறார்கள்.

அவர்களில் 85 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு கல்விக்கான வாய்ப்பே இல்லை. பள்ளிகள், குழந்தைகளை குறி வைத்து தாக்குபவர்கள் மீது எந்தவித கருணையும் காட்ட கூடாது. அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். மோதல் காலங்களிலும் கல்வி என்பது தொடர்ந்து கிடைக்க வேண்டிய ஒரு உரிமை. நிலையான அமைதியை ஏற்படுத்துவதில் மிகச்சிறந்த பங்களிப்புகளில் ஒன்றாக இந்த உரிமையை நிறைவேற்றுவது அமைகிறது.

ஆயுத மோதல்களின்போது குழந்தைகளை பாதுகாப்பதிலும், அவர்கள் கற்று கொள்வதற்கும், வளர்வதற்கும், தங்கள் முழுத்திறனை வௌிப்படுத்துவதற்குமான உரிமையை நிலைநிறுத்துவதிலும் இந்தியா தனது உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. ஒரு குழந்தையின் கல்வியை பாதுகாப்பது என்பது ஒரு நாட்டின் எதிர்காலத்தை பாதுகாப்பதாகும். குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதிலும், மேம்படுத்துவதிலும் உள்ள கடமைகளை நிறைவேற்றுவதில் அரசாங்கங்களுக்கே முதன்மையான பொறுப்பு உள்ளது” என்று தெரிவித்தார்.

Tags : India ,UN ,INA ,United Nations Security Council ,
× RELATED சீனாவில் மிக உயரமான கட்டிடம் மீது மோதிய விமானம்