டெல்லி: அடுத்தடுத்த 2 கடுமையான நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவிற்கு அவசர மனிதாபிமான உதவிகள், அவசர மருத்துவக் குழுக்கள் மற்றும் மிக முக்கியமான நிவாரணப் பொருட்களை அனுப்புவதற்காக ‘ஆபரேஷன் அமிஸ்டாட்’ (Operation Amistad) நடவடிக்கையை இந்தியா துவங்கி இருக்கிறது.
வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். வெனிசுலாவில் நிலநடுக்கத்திற்குப் பிந்தைய மீட்புப் பணிகளுக்கு உதவும் வகையில், அவசர உதவிகளை ஏற்றி கொண்டு இந்திய விமானப்படையின் (IAF) இரண்டு C-17 ரக விமானங்கள் இன்று புறப்பட்டன.
சோஷியல் மீடியா பதிவு ஒன்றில், இந்திய ராணுவத்தின் கள மருத்துவமனைப் பிரிவு நிபுணர்கள் மற்றும் 35 டன்னுக்கும் அதிகமான நிவாரணப் பொருட்கள், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் (இரண்டு ‘BHISHM Cubes’ உட்பட) இந்த அவசர நிவாரண உதவியில் அடங்கும் என்று டாக்டர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இந்தக் கடினமான சூழலில் வெனிசுலா அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் ஆதரவளிக்க இந்தியா உறுதியுடன் உள்ளது என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறி உள்ளார். இதனிடையே வெனிசுலா அரசாங்கம் இந்தியாவின் இந்த விரைவான நடவடிக்கையை மனதார வரவேற்றுள்ளது; இந்தியாவின் இந்தத் தக்க சமயத்திலான உதவிக்கரம், இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மனப்பான்மையுடன் மிகச் சிறப்பாகப் பொருந்திப் போவதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
