×

முதல்வர் விஜய் படத்தை மாட்டக்கோரி திருவள்ளூர் நகரமன்ற கூட்டத்தில் புகுந்து தவெக எம்எல்ஏக்கள் கடும் வாக்குவாதம்

 

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகரமன்ற கூடத்தில் முதல்வர் சி.ஜோசப் விஜய் படத்தை வைக்கவேண்டும் என்று வலியுறுத்தி திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் டி.அருண்குமார், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் பூந்தமல்லி எம்எல்ஏ ஆர்.பிரகாசம் (எ) குட்டி மற்றும் அந்த கட்சியினர் நகராட்சி ஆணையர் தாமோதரனிடம் கடந்த நகரமன்ற கூட்டத்தின் போது கோரிக்கை வைத்திருந்தனர். இந்தநிலையில், திருவள்ளூர் நகரமன்ற சாதாரண கூட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் டி.அருண்குமார், ஆர்.பிரகாசம் (எ) குட்டி ஆகியோர் கூட்டம் நடப்பதற்கு முன்பாக வந்தனர்.

அப்போது நகரமன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் மற்றும் திமுக கவுன்சிலர்கள் ஆகியோர் அவர்களை பார்த்து, ‘’அனுமதி இல்லாமல் எப்படி நகர்மன்ற கூடத்தில் நுழையலாம். சட்டமன்ற உறுப்பினர்களாகி நீங்கள் நகர்மன்ற கூட்டத்தில் ஒரு பார்வையாளராக கலந்துகொள்ளலாமே தவிர, உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை’’ என்று தெரிவித்தனர். அப்போது தவெக எம்எல்ஏக்கள், ‘’நகரமன்ற கூடத்தில் முதல்வர் ஜோசப் விஜய் படத்தை வைக்கவேண்டும்’ என்று கூறி கடுமையாக நடந்துகொண்டதாக தெரிகிறது.

இதன்காரணமாக எம்எல்ஏக்களுக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது. ‘’நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் மட்டுமே முதல்வர் புகைப்படம் வைக்க முடியும்’’ என்ற அரசாணையை திமுக கவுன்சிலர்கள் காண்பித்தனர். ஆனால் அதை தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏக்கள் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது.

Tags : Thiruvallur ,Tiruvallur ,Dr. ,T. Arunkumar ,South District ,Poonamalli ,R. Prakasam (A) Kutty ,Chief Minister ,C. Joseph Vijay ,Tiruvallur Municipality ,
× RELATED திருச்செந்தூர் முருகன் கோயிலில்...