×

ஹஜ் பயணம் சென்று திரும்பியபோது விழுப்புரத்தில் வேன் கவிழ்ந்து விபத்து

*10 பேர் காயத்துடன் உயிர் தப்பினர்

விழுப்புரம் : ஹஜ் புனித பயணம் சென்று திரும்பியபோது விழுப்புரம் புறவழிச்சாலையில் வேன் டயர் வெடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வேனில் பயணித்த 24 பேரில், 10 பேர் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பெரம்பலூர் மாவட்டம், வி.களத்தூரை சேர்ந்த உமயத்துல்லா, அப்துல் வாகித், ஹாசிமா பேகம், ஹாரிபா உள்ளிட்ட 4 பேர் ஹஜ் புனித பயணம் மேற்கொண்டனர். ஆன்மீக பயணத்தை முடித்த அவர்கள், மீண்டும் சென்னைக்கு விமானத்தில் வந்தடைந்தனர்.

அவர்களை அங்கு வரவேற்ற குடும்பத்தினர், உறவினர்கள் வேன் மூலமாக சொந்த ஊருக்கு 4 பேரையும் அழைத்து வந்து கொண்டிருந்தனர். வி.களத்தூரை சேர்ந்த சதாம் உசேன்(33) என்பவர் வேனை ஓட்டிவந்தார்.

இந்த வேன் நேற்று அதிகாலை விழுப்புரம் அருகே உள்ள ஜானகிபுரம் பகுதியில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது வேனின் முன்பக்க டயர் திடீரென வெடித்து சாலையின் ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வேனில் பயணித்த 8 குழந்தைகள், 8 ஆண்கள், 8 பெண்கள் என 24 பேரில் 10 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த தாலுகா போலீசார், அங்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு முண்டியம்பாக்கத்திலுள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து காரணமாக சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஹஜ் புனித பயணம் மேற்கொண்டு திரும்பியவர்கள் விபத்தில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Villepuram ,Haj ,Viluppuram ,Hajj ,Perambalur ,
× RELATED திருவாலங்காடு – அரக்கோணம் 4 வழி...