×

வத்தலக்குண்டு அருகே மறியல் டாஸ்மாக்கை மக்கள் முற்றுகை

*500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு அருகே டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பொதுமக்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே ரெங்கப்பநாயக்கன்பட்டி, ராமநாயக்கன்பட்டி கிராமங்களில் சுமார் 1000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் ரெங்கப்பநாயக்கன் பாலத்தையொட்டி அரசு டாஸ்மாக் கடை செயல்படுகிறது.

இக்கடை அருகே அரசு பள்ளிகள் மற்றும் கோயில்கள் உள்ளன. இததவிர இக்கடை வழியாக ஆண்டிபட்டி, காமாட்சிபுரம், தெப்பத்துப்பட்டி, குன்னுவாராயன்கோட்டை உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் மற்றும் வாகனங்கள செல்கின்றன. இதனால் இந்த டாஸ்மாக் கடையால் இவ்வழியாக செல்லும் பள்ளி மாணவ- மாணவிகள், விவசாயிகள், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இருந்து வந்தது.

மேலும் சாலையோரம் உள்ள இந்த கடையால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் இந்த கடையை அகற்ற வேண்டும் என அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால் அதிகாரிகள் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ரெங்கப்பநாயக்கன்பட்டி, ராமநாயக்கன்பட்டி கிராமங்களை சேர்ந்த 200 பெண்கள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் நேற்று காலை வத்தலக்குண்டு-ரெங்கப்பநாயக்கன்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் கவுதம், எஸ்ஐ முனியாண்டி, போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பொதுமக்கள் சமாதானம் ஆகவில்லை.

பின்னர் நிலக்கோட்டை டிஎஸ்பி பொறுப்பு சுபகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போதும் சமரசம் ஆகாத பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதால் ஊழியர்கள் டாஸ்மாக் கடையை மூடி சென்று விட்டனர்.

பின்னர் டிஎஸ்பி மற்றும் போலீசார் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி இன்னும் 20 நாட்களில் டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அதன்பின்பே பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். காலை 10 மணிக்கு துவங்கிய 12 மணி வரை நீடித்த மறியலால் அப்பகுதியில் சுமார் 3 மணிநேரம் பாதிக்கப்பட்டது.

Tags : TASMAC ,Vathalakundu ,Rengappanayakkanpatti ,Ramanayakkanpatti ,Vathalakundu, Dindigul district ,
× RELATED உதகை அருகே வீட்டிற்குள் புகுந்த...