தர்மபுரி, ஜூன் 25:தர்மபுரியில், சாக்பீஸ் உற்பத்தி செலவு அதிகரிப்பால், நடப்பாண்டில் 10 சதவீத விலை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் பெரும்பாலான பள்ளிகளில் டிஜிட்டல் போர்டுகளில் பாடம் கற்பிக்கப்படுகிறது. ஆனால், அரசு பள்ளிகளில் தற்போதும் மாணவ, மாணவிகளுக்கு கரும்பலகைகளில் தான் பாடம் நடத்தப்படுகின்றன. இதற்கு சாக்பீஸ்கள் அத்தியாவசிய தேவையாக உள்ளது. தர்மபுரி அருகே உங்காரனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட எர்ரங்காட்டுக்கொட்டாய் பகுதியில், சாக்பீஸ் தயாரிக்கும் பணி வெகு மும்முரமாக நடந்து வருகிறது. சாக்பீஸ்களை அச்சில் வார்த்து எடுப்பது, வெயிலில் காயவைப்பது, பேக்கிங் செய்வது என தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்தாண்டை போல் இல்லாமல், நடப்பாண்டில் சாக்பீஸ் வாங்குவது 30 சதவீதத்திற்கு குறைந்துள்ளது. இதனால் சாக்பீஸ் விற்பனை மந்தமாக உள்ளது என தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
