பாலக்கோடு, ஜூன் 25: மாரண்ட அள்ளியில் இருந்து, 2 கி.மீ தொலைவில் உள்ளது சி.எம்.புதூர் ஊராட்சி. இந்த ஊரின் வழியாக மாரண்ட அள்ளியில் இருந்து பாலக்கோடு மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், சி.எம்.புதூரில் வசிக்கும் 250க்கும் மேற்பட்ட குடும்பங்களிடம் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக பிரிக்காமல் ஊராட்சி நிர்வாகம் அனைத்து குப்பைகளையும் மாரண்டஅள்ளி-வெள்ளிசந்தை சாலையில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், அப்பகுதி மூழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குப்பைகளை தீயிட்டு எரிப்பதால், ஏற்படும் புகையால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும், காய்ச்சலால் அதிக பாதிப்பு உள்ள நிலையில் சி.எம்.புதூர் ஊராட்சி நிர்வாகம், உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை எரிப்பதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
