×

அடுத்த மாதம் கமேனி இறுதிச்சடங்கு -நிகழ்வில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு ஈரான் அழைப்பு!

டெல்லி: ஈரான் நாட்டின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அரசுமுறை இறுதிச் சடங்கு மற்றும் அடக்கச் சடங்குகளில் கலந்து கொள்ளுமாறு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

புதுடெல்லியில் உள்ள ஈரான் தூதரகம் மூலமாக இதற்கான அழைப்பு அடங்கிய கடிதம் இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் (MEA) ஒப்படைக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த பிப்ரவரி 28 அன்று டெஹ்ரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய 2 நாடுகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதல்களில், 86 வயதான அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.

அதன் பிறகு ஈரானில் தொடர்ந்து நிலவிய போர் மற்றும் பாதுகாப்பு சூழல் காரணமாக, மறைந்த அலி கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் 100 நாட்களுக்கும் மேலாக ஒத்திவைக்கப்பட்டன. தற்போது தற்காலிக அமைதி ஒப்பந்தம் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கையெழுத்தாகி இருக்கும் நிலையில், கமேனியின் இறுதி சடங்கை உரிய முறைப்படி நடத்த ஈரான் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இதன்படி கமேனியின் அரசு முறை இறுதிச்சடங்கு நிகழ்வுகளை வரும் 2026, ஜூலை 4 முதல் ஜூலை 9 வரை நடத்த திட்டமிட்டுள்ளது. இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி இந்த இறுதிச்சடங்கில் நேரில் கலந்துகொள்வாரா என்பதை இந்திய அரசு இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இந்த அழைப்பை ஒன்றிய அரசு பரிசீலித்து வருவதாகவும், இந்தியக் குழுவிற்கு யார் தலைமை தாங்குவது என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags : IRAN ,MODI ,KHAMENI FUNERAL ,Delhi ,President ,Masood Beseshkian ,Narendra Modi ,Supreme Leader ,Ayatollah Ali Khamenei ,
× RELATED 20 பாஜக கவுன்சிலர்களின் பதவிப்பிரமாணம்...