சென்னை: சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் திமுக-அதிமுக கவுன்சிலர்கள் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில், ஆணையாளர் சமீரன், துணை மேயர் மகேஷ் குமார் முன்னிலையில் இன்று நடைபெற்றது. மூன்று மாதங்களுக்கு பின்பு நடக்கும் கூட்டம் என்பதால் பலத்த எதிர்பார்ப்புடன் கூட்டம் தொடங்கியது. ஏராளமான போலீசார் ரிப்பன் மாளிகை வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்தனர். ஏராளமான பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் குவிந்திருந்தனர். எம்எல்ஏ – எம்பிக்களுக்கு தனியாக இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் அவர்கள் யாரும் வரவில்லை. முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் படம் வைக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் திமுக உறுப்பினர் சிற்றரசு பேசுகையில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் படங்கள் மண்டல குழு கூட்டங்களிலும் வைக்க ஆணையாளர் அனுமதி தர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
ஏற்கனவே இதற்கு அரசாணை உள்ளதாக உறுப்பினர் விசுவநாதன் உட்பட பலர் பேசினர். அதிமுக குழு தலைவர் சதீஷ்குமார் பேசுகையில் தனது வார்டு வர்மா காலனி பகுதியில் 2000 மக்கள் இருப்பதாகவும் ஆனால் எந்த அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. ஓட்டு மட்டும் உள்ளது. நாமெல்லாம் ஓட்டு திருடுகிறோம் என கூறினார். இதற்கு மேயர், அந்த பகுதி ஆக்கிரமிப்பில் இருப்பதால் அங்கு நாம் எந்த வசதியும் செய்ய முடியவில்லை. நாங்கள் நேரில் ஆய்வு செய்து பதில் சொல்கிறோம் என கூறினார். அப்போது அந்த பகுதி மண்டல குழு தலைவர் ரவிச்சந்திரன் ஏதோ பேச எழுந்தார். அவரை சதீஷ்குமார், நீங்கள் அமருங்கள் என கூறினார். திமுக மாமன்ற உறுப்பினர் கணேசன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது அவர் நீங்கள் அரசியல் பேசினீர்கள். நான் வார்டு சம்பந்தமாக பேசுகிறேன். என் தலைவரை பற்றி பேசவில்லை என கூறினார். அப்போது திமுக தரப்பில் உங்களுக்கு தலைவரே இல்லையே என கூறினர்.
இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் தனது இருக்கையை விட்டு திமுக உறுப்பினர்களை நோக்கி வந்தார். இதற்கு திமுக தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பல உறுப்பினர்கள் தங்களது இருக்கை விட்டு எழுந்து அவரை நோக்கி ஓடி வந்தனர். மாமன்ற உறுப்பினர் வீ.கவி கணேசன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். 1வது வார்டு உறுப்பினர் சிவக்குமார் தனது கையில் இருந்த பேப்பர்களை சதீஷ்குமாரை நோக்கி வீசி எறிந்தார். அப்போது மூத்த திமுக உறுப்பினர்கள் சரவணன் பரிமளம் திமுக மன்ற உறுப்பினர்களை சமாதானப்படுத்தி இருக்கைக்கு அழைத்து சென்றனர். சிறிது நேரம் அவையில் ஒரே சலசலப்பு ஏற்பட்டது. மேயர் எழுந்து நின்று உறுப்பினர்களை அமைதிப்படுத்த முயற்சி செய்தார். நீண்ட நேரத்துக்கு பின்பு சபை அமைதியானது.
