×

ராமநாதபுரம் கலெக்டர் ஆபீஸ் பழைய கட்டிடத்தில் கழிவுநீர் குழாய்கள் உடைந்து ‘செம கப்’

*பொதுமக்கள் முகம் சுளிப்பு

ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் ஆபீஸ் பழைய கட்டிடங்களின் கழிவுநீர் குழாய்கள் உடைந்து துர்நாற்றம் வீசி சுகாதாரக்கேடு நிலவி வருவதால் பொதுமக்கள் முகம்சுளித்து வருகின்றனர்.ராமநாதபுரம் பட்டணம்காத்தான் சேதுபதி நகரில் அமைக்கப்பட்ட ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு 1984ல் கட்டிடங்கள் கட்டப்பட்டது. 42 வருடங்களை கடந்ததால் பழைய கட்டிடத்தின் பெரும் பகுதி சேதமடைந்தது.

இதனால் அருகில் ரூ.11 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த புதிய கலெக்டர் அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு 2018ம் ஆண்டு பெரும்பாலான முக்கிய துறை அலுவலகங்கள் பழைய கட்டிடத்திலிருந்து புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

புதிய கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அதனை சேர்ந்த பிரிவு அலுவலகம், திட்ட இயக்குனர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், ஊராட்சிகள் உதவி இயக்குனர் மற்றும் அதனை சேர்ந்த வளர்ச்சி பிரிவு அலுவலகம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், செயற்பொறியாளர் மற்றும் பிரிவு அ, பிரிவு ஆ, பிரிவு இ, பிரிவு சி, பிரிவு டி, பிரிவு இ, பிரிவு எப், பிரிவு ஜி, பிரிவு எச், பிரிவு ஐ, பிரிவு ஜெ, பிரிவு கே, பிரிவு எல், பிரிவு எம், பிரிவி என் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட துறைகளின் அலுவலகம், துறை வாரியான கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள், தனிக்கைகள் உள்ளிட்ட அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

இதே போன்று பழைய அலுவலக கட்டிடத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் உள்ளிட்ட கல்வி அலுவலகங்கள், சிறப்பு நீதிமன்றம், முதலமைச்சரின் காப்பீடு திட்ட அலுவலகம், மாவட்ட நில அளவை உள்ளிட்ட சில முக்கிய துறைகளின் அலுவலகங்கள் இயங்கி வருகிறது. இரண்டு கட்டிடங்களிலும் உள்ள அலுவலகங்களில் பெண் அலுவலர்கள் உள்பட 900க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இதேபோன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உள்ளிட்ட சிறப்பு கூட்டங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் மற்றும் கோரிக்கைகள், அரசு நலத்திட்டங்கள், உதவிகள் பெற, மனு அளித்தல் போன்றவற்றிற்காக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் பழைய அலுவலக கட்டிடங்கள் முறையாக பராமரிக்காததால் சிதிலமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக கழிப்பறை குழாய்கள் ஆங்காங்கே சேதமடைந்து இருப்பதால் கழிவுநீர் பொதுமக்கள் நடந்து செல்லும் பாதை பகுதியில் வழிந்தோடி வருகிறது.

இதனால் கடும் துர்நாற்றம் வீசி வருவதுடன், சுகாதாரமற்று இருப்பதால் பொதுமக்கள் முகம் சுழித்து வருகின்றனர். எனவே சிதிலமடைந்த பழைய கட்டிடத்தை மராமத்து செய்து சேதமடைந்து கழிவுநீர் குழாய்களை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Ramanathapuram Collector Office ,Sema Cup ,Ramanathapuram ,Ramanathapuram Collector's Office ,Sethupati City ,
× RELATED அரசின் சாதனைகள் இடம்பெறலாம்; கட்சி விளம்பரம் கூடாது – சென்னை மேயர் பிரியா