×

பாதியில் நிறுத்தப்பட்ட மழைநீர் கால்வாய் பணி தெருக்களில் கழிவுநீர் தேக்கம்: தொற்று நோய் பரவும் அபாயம்

புழல்: புசென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலத்திற்கு உட்பட்ட 23 மற்றும் 24வது வார்டு பகுதிகளான புழல், காவாங்கரை, கண்ணப்பசாமி நகர், திருமலை நகர், கன்னடபாளையம், சக்திவேல் நகர், மெர்சி நகர், மகாவீர் கார்டன், பாலாஜி நகர், மேக்ரோ மார்வெல் நகர், புழல் கடை வீதி, புனித அந்தோனியார் நகர், அண்ணா நினைவு நகர், புழல் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலை மாதவரம் நோக்கி செல்லும் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் கால்வாய்கள் கடந்த சில ஆண்டுகளாக அமைக்கப்பட்டு வருகிறது.

சில தெருக்களில் இன்னும் அதற்கான பணிகள் நடைபெறாமல் உள்ளது. புழல் கேம்ப் அம்பேத்கர் சிலை எதிரில் இருந்து புழல் சைக்கிள் ஷாப் மாதவரம் நோக்கி செல்லும் திசையில் செல்லும் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டு, எம்ஜிஆர் சிலை அருகில் ரெட்டைமலை சீனிவாசன் தெரு குறுக்கே மட்டும் கால்வாய் பணி துவங்கப்படாமல் இடைவெளி விட்டு, மீண்டும் சிஎஸ்ஐ கிறிஸ்து ஆலயம், சுடுகாடு சுற்றுசுவர் முதல் தொடங்கி புழல் சைக்கிள் ஷாப் வரை மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

ரெட்டமலை சீனிவாசன் தெரு குறுக்கே கால்வாய் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளதால், மழைநீர் கால்வாயில் கழிவுநீர் கலந்து, சிஎஸ்ஐ கிறிஸ்தவ ஆலயம், கால்பந்தாட்ட விளையாட்டு திடல், அரசு நிதி உதவிபெறும் தொடக்கப் பள்ளி, அம்மா உணவகம், மாநகராட்சி மினி மருத்துவமனை முன்பு கழிவுநீர் தேங்குவதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

குறிப்பாக, மழைநீர் கால்வாய் பாதியிலே விடப்பட்டதால் இதிலிருந்து வெளியேறும் கழிவுநீர், சர்வீஸ் சாலையில் தேங்கி ரெட்டமலை சீனிவாசன் தெருவில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், இந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள், கால்பந்தாட்ட விளையாட்டு வீரர்கள், கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் மழைநீர் கால்வாயில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து பெருக்கெடுத்து ஓடும் சூழ்நிலை உள்ளது. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட 24வது வார்டு மாதவரம் மண்டல மாநகராட்சி அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுத்து மழைநீர் கால்வாயில் கழிவுநீர் விடுபவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கவும், முடிக்கப்படாமல் உள்ள மழைநீர் கால்வாய்களை முறையான முறையில் முடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Puzhal ,Kaavankarai ,Kannappaswamy Nagar ,Thirumalai Nagar ,Kannadapalayam ,Sakthivel Nagar ,Mercy Nagar ,Mahaveer Garden ,Balaji Nagar ,Macro Marvel Nagar ,Chennai Corporation ,Madhavaram ,
× RELATED முழு பயிர்க்கடன் தள்ளுபடி கோரி...