லண்டன்: ஒரு காலத்தில் உலகையே ஆட்டிப்படைத்த இங்கிலாந்தின் நிலை இன்று மிகப் பரிதாபமாகி விட்டது. நிர்வாகத் திறன் இல்லாத தலைவர்களால் கடந்த 10 ஆண்டுகளில் 7 பிரதமர்கள் பதவி விலகி விட்டனர். கடைசியாக கெயர் ஸ்டார்மரும் ராஜினாமா செய்வதாக அறிவித்து விட்டார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பொதுத் தேர்தலில் பலத்த எதிர்பார்ப்புகளுடன் ஆட்சி அமைத்த ஸ்டார்மர் இரண்டே ஆண்டில் வெறுக்கத்தக்க நபராகி விட்டார்.
உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக இருந்த இங்கிலாந்து இன்று தோல்வி அடைந்த நாடாகி விட்டது. திவாலாகி விட்டது. சுகாதார அமைப்பு சீரழிந்து விட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. அடுத்து, இந்த நிலைமை இன்னும் மோசமாகப் போகிறது என்கின்றனர் நிபுணர்கள். அதற்கான காரணங்கள் இதோ:
1. இங்கிலாந்து அரசு வருமான வரி மூலம் திரட்டும் நிதியை விட நலத்திட்டங்களுக்கு அதிக நிதி செலவிடுகிறது. ரூ.41 லட்சம் கோடி வரி வருவாய் கிடைக்கும் நிலையில், ரூ.41.5 லட்சம் கோடியை நலத்திட்டங்களுக்கு செலவு செய்ய வேண்டியிருக்கிறது. இதனால் முழு பொருளாதாரமும் மீள முடியாத சிக்கலில் மாட்டி கொண்டிருக்கிறது.
2. உலகின் பாலியல் வன்கொடுமையின் தலைநகரமாக இங்கிலாந்து மாறிவிட்டது. இங்கிலாந்து மற்றும் வேல்சில் மார்ச் 2025 வரையிலான ஓராண்டில் 71,667 பாலியல் வன்கொடுமை குற்றங்கள் பதிவாகி உள்ளன. அதாவது கிட்டத்தட்ட ஒருநாளுக்கு 200 குற்றங்கள் நடந்திருக்கின்றன.
3. 149 நகரங்களில் அரசுக்கும், போலீசுக்கும், உள்ளூர் கவுன்சில்களுக்கும் தெரிந்தே மாபியா கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான சிறுமிகள் மாபியா கும்பல்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதை இனவெறியர்கள் என முத்திரை குத்தப்படுவோம் என்ற அச்சத்தின் காரணமாக அரசு கண்டு கொள்ளவில்லை.
4. சுகாதார அமைப்பு முற்றிலும் சீர்குலைந்து விட்டது. 70 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் சிகிச்சைக்காக காத்திருக்கிறார்கள். அவர்களில் ஒரு லட்சம் பேர் ஓராண்டிற்கும் மேலாக காத்திருக்கிறார்கள். அவசர சிகிச்சை பிரிவில் 10 பேரில் 4 பேருக்கு 4 மணி நேரத்திற்குப் பிறகுதான் சிகிச்சை கிடைக்கும் நிலையில் மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்களின் எண்ணிக்கை இருக்கிறது.
5. இணையத்தில் கருத்து சுதந்திரம் முற்றிலும் நசுக்கப்பட்டுள்ளது. மற்ற எந்த நாடுகளையும் விட இங்கிலாந்தில் தான் இணையத்தில் கருத்து கூறியதற்காக அதிகமானோர் கைது செய்யப்படுகின்றனர். 2023ம் ஆண்டில் புண்படுத்தும் தகவல் தொடர்பு சட்டங்களின் கீழ் காவல்துறை 12,183 பேரை கைது செய்தது. அதாவது ஒவ்வொரு நாளும் 33 பேர் சமூக ஊடகத்தில் பதிவிட்டதற்காக கைதாகி உள்ளனர்.
6. பசுமை ஆற்றல் என்ற பெயரில் தனது அனைத்து புதிய எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகளுக்கும் இங்கிலாந்து தடை விதித்தது. இதனால் நார்வேயிடமிருந்து எரிவாயுவை வாங்க வேண்டிய கட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இப்போது நார்வே தான் இங்கிலாந்தின் மிகப்பெரிய எரிசக்தி வழங்குநராக இருக்கிறது.
7. கடந்த மே மாதத்தில் மட்டும் இங்கிலாந்து சுமார் ரூ.30 லட்சம் கோடி கடன் வாங்கியது. இது ஒரே மாதத்தில் வாங்கப்பட்ட 2வது அதிகபட்ச கடன் தொகையாகும். அரசாங்கத்தின் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 95 சதவீதமாக உள்ளது. கடன் வட்டிக்காக மட்டும் மே மாதத்தில் ரூ.15 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இது ஓராண்டுக்கு முன்பு இருந்ததை விட ரூ.50 ஆயிரம் கோடி அதிகம். எனவே நாடு திவாலான நிலையில் உள்ளது.
8. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இங்கிலாந்து 6 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டது.
9.பொருளாதார பாதிப்பு மற்றும் பாதுகாப்பின்மையால் 2025ம் ஆண்டில் மற்ற எந்த நாட்டையும் விட இங்கிலாந்து அதிகமான கோடீஸ்வரர்களை இழந்தது. அவர்கள் வெறும் கையோடு போகவில்லை. ரூ.8.5 லட்சம் கோடியுடன் வெளியேறி உள்ளனர். பணக்காரர்கள் மட்டுமல்ல, 2025ல் 2.46 லட்சம் சாமானிய மக்களும் இங்கிலாந்தை காலி செய்து வெளியேறினர். வேறு எந்த நாட்டிற்கு சென்றாலும் சிறப்பான வாழ்க்கை வாழ முடியும் என அவர்கள் கருதினர்.
இந்த நிலைமை அடுத்த ஆட்சியிலும் மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. ஏனெனில் அடுத்த பிரதமராக வரப்போகிறவர் ஆண்டி பர்ன்ஹாம். அவர் இன்னும் தீவிர இடதுசாரி. அதிக பொது கட்டுப்பாடு, அதிக வரிகளே அவரது பெரிய செயல்திட்டமாக உள்ளது. எனவே இங்கிலாந்து தற்செயலாக வீழ்ச்சி அடையவில்லை. சரியான தலைமை இல்லாததால் அது சீரழிக்கப்பட்டுள்ளது.
