×

மெஸ்ஸியின் 4 உலக சாதனைகளுடன் ஆஸ்திரியாவை வீழ்த்தியது அர்ஜென்டினா

டாலஸ்: ஆஸ்திரியா அணிக்கு எதிரான ஜி பிரிவு லீக் ஆட்டத்தில் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற உதவிய கேப்டன் லியோனல் மெஸ்ஸி, 4 உலக சாதனைகளையும் பதிவு செய்து அசத்தினார். அமெரிக்காவின் டாலஸ் நகரில் நடந்த இப்போட்டியின் 10வது நிமிடத்திலேயே கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பை மெஸ்ஸி வீணடித்தார். ஆஸ்திரியாவின் ரொமானோ தவறிழைத்ததற்காக வழங்கப்பட்ட அந்த ஸ்பாட் கிக்கை வலதுபுற கோல் கம்பத்துக்கு வெளியே அடித்த மெஸ்ஸி, உலக கோப்பையில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் தனித்தே முதலிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டார்.

உலக கோப்பையில் இது மெஸ்ஸி அடித்த 7வது பெனால்டி ஷாட். இதில் 4 முறை வெற்றிகரமாக செயல்பட்டுள்ள அவர், 3 வாய்ப்புகளை நழுவவிட்டிருக்கிறார். ஆனாலும், ஆஸ்திரிய அணிக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்த அர்ஜென்டினா, 38வது நிமிடத்தில் கேப்டன் மெஸ்ஸி அநாயசமாக அடித்த கோலால் 1-0 என முன்னிலை பெற்றது. இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்த ஆட்டத்தின் பெரும் பகுதியில் மேற்கொண்டு கோல் விழாததால் அர்ஜென்டினா 1-0 என வெற்றி பெறும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், காயம் காரணமாக விரயமான நேரத்தை ஈடு செய்வதற்காக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் மெஸ்ஸி தனது 2வது கோலை திணித்து (90’+5’) 2-0 என வெற்றி தேடித் தந்தார். தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்த அர்ஜெனடினா நாக் அவுட் சுற்று வாய்ப்பை உறுதி செய்தது. ஆட்ட நாயகன் விருது பெற்ற மெஸ்ஸி, இந்த சிறப்பான ஆட்த்தின் மூலமாக 4 உலக சாதனைகளையும் படைத்து அசத்தினார்.

* எம்பாப்பே அசத்தலில் பிரான்ஸ் முன்னேற்றம்
பிலடெல்பியாவில் நடந்த ஐ பிரிவு லீக் ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஈராக் அணியை எளிதாக வீழ்த்தியது. பிரான்ஸ் கேப்டன் கிலியன் எம்பாப்பே 14வது மற்றும் 54வது நிமிடத்தில் அற்புதமாக கோல் அடித்து அசத்தினார். ஓஸ்மேன் டெம்பெலி 66வது நிமிடத்தில் கோல் அடிக்க, பிரான்ஸ் 3-0 என வென்றதுடன் நாக் அவுட் சுற்ற்று வாய்ப்பையும் உறுதி செய்தது. உலக கோப்பையில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் எம்பாப்பே (27 வயது) 2வது இடத்துக்கு முன்னேறி உள்ளதுடன், அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸியின் சாதனையை விரைவில் முறியடித்து முதலிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது.

* போராடி வென்றது நார்வே
ஐ பிரிவில் நேற்று நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் நார்வே செனகல் அணிகள் மோதின. நியூ ஜெர்சி அரங்கில் நடந்த இப்போட்டியில் நார்வே 3-2 என்ற கோல் கணக்கில் போராடி வென்றது. நார்வே தரப்பில் மார்கஸ் பெடர்சன் (43வது நிமிடம்), எர்லிங் ஹாலண்ட் 48வது மற்றும் 58வது நிமிடங்களில் கோல் போட்டனர். செனகல் வீரர் இஸ்மாய்லா சார் (53’ மற்றும் 90+3’) 2 கோல் அடித்தார். இந்த பிரிவில் பிரான்ஸ், நார்வே இரு அணிகளும் தலா 6 புள்ளிகள் பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளன. ஜூன் 27ம் தேதி பாஸ்டன் ஸ்டேடியத்தில் நடக்க உள்ள லீக் ஆட்டத்தில் பிரான்ஸ் நார்வே மோதுகின்றன.

* நிம்மதியாக இருக்கிறது
ஆஸ்திரியா போட்டிக்கு பிறகு பேட்டியளித்த மெஸ்ஸி கூறுகையில், ‘வெற்றி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கடினமான முயற்சிக்குப் பிறகே இது சாத்தியமானது. 6 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்ததில் மன நிம்மதி கிடைத்துள்ளது’ என்றார். இன்று தனது 39வது பிறந்த நாளை உற்சாகமாகக் கொண்டாடும் மெஸ்ஸிக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

* சாதனை மேல் சாதனை
* உலக கோப்பையில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜெர்மனியின் குளோஸ் உடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டிருந்த மெஸ்ஸி, ஆஸ்திரியாவுக்கு எதிராக முதல் கோல் போட்டதும் தனியாகவே முதலிடத்துக்கு முன்னேறினார். தற்போது தனது 6வது உலக கோப்பையில் விளையாடி வரும் மெஸ்ஸி, 35 வயதுக்கு பிறகு 12 கோல் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* உலக கோப்பையில் அதிக போட்டியில் விளையாடிய வீரர் என்ற சாதனையும் மெஸ்ஸி வசமாகி உள்ளது. ஆஸ்திரியாவுக்கு எதிராக விளையாடியது அவரது 28வது போட்டியாகும்.

* பிபா உலக கோப்பையில் அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற வீரரும் மெஸ்ஸிதான். அவர் இதுவரை 18 வெற்றிகளில் பங்கெடுத்துள்ளார்.

* உலக கோப்பையில் அதிக நேரம் விளையாடிய வீரரும் அவரே. இதுவரை 2,489 நிமிடம் அவர் களத்தில் இருந்துள்ளார்.

* வாய்ப்பை தக்கவைத்தது அல்ஜீரியா
சான்பிரான்சிஸ்கோ பே ஏரியா ஸ்டேடியத்தில் நடந்த ஜே பிரிவு லீக் ஆட்டத்தில் ஜோர்டான் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய அல்ஜீரியா அணி, அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்தது. அல்ஜீரியா சார்பில் நதிர் பென்பொவாலி (69வது நிமிடம்), அமின் கொய்ரி 82வது நிமிடத்தில் கோல் போட்டனர். ஜோர்டான் வீரர் நிஸார் அல்ரஷ்தான் 36வது நிமிடத்தில் கோல் அடித்தார். ஜே பிரிவில் அர்ஜென்டினா நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், தலா 3 புள்ளிகள் பெற்றுள்ள ஆஸ்திரியா, அல்ஜீரியா அணிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. தொடர்ச்சியாக 2வது தோல்வி கண்ட ஜோர்டான் பரிதாபமாக வெளியேறுகிறது.

Tags : Argentina ,Austria ,Messi ,Dallas ,Lionel Messi ,Group G league ,Dallas, USA… ,
× RELATED ஐபிஎல் 2027: ரிஷப் பண்ட் டெல்லி அணிக்கும்,...